"மோடி மீண்டும் பிரதமராவது உறுதி" - ஜி.கே.வாசன்
மோடி மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்பது உறுதி என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தர்மபுரி தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்பது 101 சதவீதம் உறுதி. தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய நல்ல திட்டங்கள் மீண்டும் தொடர மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழக அரசு அனைத்திலும் நம்பர் 1 அரசு என விளம்பரப் படுத்திக் கொள்கிறது. ஆம், இந்த அரசு போதை பொருட்கள் புழக்கத்திலும், கஞ்சா விற்பனையிலும் நம்பர் 1 அரசாகத் திகழ்கிறது. எனவே, திமுக-வுக்கு வாக்களிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
ஆகவே, இம்மாவட்டத்தை சாதி, மதம் கடந்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பல்வேறு செயல்திட்டங்களை கொண்டுள்ள பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.என தெரிவித்தார்.