நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- ஈரோடு


நாடாளுமன்ற தேர்தல்:  தொகுதி கண்ணோட்டம்- ஈரோடு
x

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டபோது காங்கேயம், தாராபுரம் தொகுதிகள் ஈரோடு மாவட்டத்தில் இருந்தன.

மிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதிகளின் வரிசையில் 17-வது இடத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உள்ளது. 2004-ம் ஆண்டு தேர்தல் வரை ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இல்லை. தொகுதிகள் மறுசீரமைப்பின் போது அதுவரை இருந்த திருச்செங்கோடு தொகுதிக்கு மாற்றாக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன. காங்கேயம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகள் திருப்பூர் மாவட்டத்திலும், குமாரபாளையம் தொகுதி நாமக்கல் மாவட்டத்திலும் உள்ளன. இவ்வாறு 3 மாவட்டங்களை சேர்ந்த 6 சட்டமன்ற தொகுதிகள் இணைந்து ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உருவானது. மேலும் தொகுதியில் ஈரோடு மாநகராட்சி, பள்ளிபாளையம், குமாரபாளையம், தாராபுரம், காங்கேயம், வெள்ளக்கோவில் என 5 நகராட்சிகள், 24 பேரூராட்சிகள், 149 கிராம ஊராட்சி பகுதிகள் உள்ளன.

முதல் எம்.பி. கணேசமூர்த்தி

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டபோது காங்கேயம், தாராபுரம் தொகுதிகள் ஈரோடு மாவட்டத்தில் இருந்தன. அதன்பிறகே திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது எப்படி இருந்தாலும் தற்போது 3 மாவட்டங்களை உள்ளடக்கி ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அமைந்திருக்கிறது.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலான 2009-ல் வெற்றி பெற்று ஈரோடு தொகுதியின் முதல் எம்.பி. என்ற பெருமையை அ.கணேசமூர்த்தி பெற்றார். அப்போது அவர் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் செல்வகுமார சின்னையன் வெற்றி வாகை சூடினார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க. வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அ.கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். மொத்தம் 3 முறை தேர்தல் கண்டுள்ள ஈரோடு தொகுதி 4-வது முறையாக தேர்தலை சந்திக்கிறது.

நட்சத்திர தொகுதி

தற்போதைய நிலவரப்படி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு மிக்க தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி எம்.எல்.ஏ.வாக உள்ளார். அ.தி.மு.க.வின் செல்வாக்கு பெற்ற தொகுதியாக இது உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவரது மறைவை தொடர்ந்து 2023-ல் நடந்த இடைத்தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரியும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

ஈரோடு மேற்கு தொகுதியில் 3-வது முறை சு.முத்துசாமி வெற்றி பெற்றார். இதன் மூலம் சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் மீண்டும் அமைச்சர் ஆனார். மொடக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜனதா கட்சியின் டாக்டர் சி.சரஸ்வதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

தாராபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் கயல்விழி செல்வராஜ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் தற்போது அமைச்சராக உள்ளார். காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.பெ.சாமிநாதன் வெற்றி பெற்றார். ஏற்கனவே அமைச்சராக இருந்த அவர் மீண்டும் அமைச்சராக உள்ளார்.

இவ்வாறு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தற்போது 3 அமைச்சர்கள், 1 முன்னாள் அமைச்சர், ஒரு முன்னாள் மத்திய மந்திரி ஆகியோரை சட்டமன்ற உறுப்பினர்களாக கொண்ட நட்சத்திர தொகுதியாக இருக்கிறது.

சாதிவாரியாக...

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பெரும்பாலும் கொங்கு வேளாள கவுண்டர்கள் அதிகம் உள்ள தொகுதி. அதற்கு அடுத்து முதலியார், வேட்டுவ கவுண்டர்கள் உள்ளனர். ஆதிதிராவிட சமூக மக்கள் பரவலாக இருக்கிறார்கள். வடஇந்தியர்களும் இந்த தொகுதியில் கணிசமாக உள்ளனர். நாடார்கள் இனத்தினர் பரவலாக இருக்கின்றனர். வன்னியர்களும் பலமான வாக்கு சதவீதத்தை வைத்திருக்கின்றனர்.

சிறுபான்மை மக்கள் இந்த தொகுதியில் அதிகமாக உள்ளனர். 6 சட்டமன்ற தொகுதிகளில் ஓரிரு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் சிறுபான்மையினர் பரவலாக உள்ளனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திட்டங்களுக்கே ஆதரவு அதிகமாக இருக்கும். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) உள்ளிட்ட பல்வேறு சட்டங்களால் வணிகர்கள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக உள்ளது.அதே நேரம் கடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளான நீட் ஒழிப்பு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு அளித்த புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம், ஓய்வூதியர்களுக்கான சில திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படாதது அதுசார்ந்த பிரிவினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வுக்கு சாதகம்

பொதுவாக பார்த்தால் கடந்த 3 சட்டமன்ற பொதுத்தேர்தல்களை ஒப்பிட்டால் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதியாகவே உள்ளது. தற்போதைய நிலையில் குமாரபாளையம் அ.தி.மு.க.வின் கையில் இருக்கிறது. மொடக்குறிச்சி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் அந்த வெற்றியும் அ.தி.மு.க. மூலம் கிடைத்தது. அதுவும் மிகச்சிறிய அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி என்பது அனைவருக்கும் தெரியும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்காக தி.மு.க. பெற்றுக்கொடுத்த மாபெரும் வெற்றியாக உள்ளது. ஈரோடு மேற்கு அமைச்சர் சு.முத்துசாமியின் வெற்றிக்கு பிறகு, பெரும்பாலனவர்கள் தி.மு.க.வின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். காங்கயம் தொகுதியும் அமைச்சர் தொகுதி, தாராபுரம் தொகுதியும் அமைச்சர் தொகுதி என்பதால் தற்போதைய கள நிலவரப்படி ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சற்று வலுவாகவே உள்ளது.

தற்போது தி.மு.க.. அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் த.மா.கா. நாம் தமிழர் கட்சி மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

நெசவுத்தொழில்

ஈரோடு கிழக்கு, குமாரபாளையம் தொகுதிகள் முழுமையான வணிகம் சார்ந்தவை. தறிக்கூடங்கள், தறி தொழிலாளிகள் அதிகம் உள்ளனர். இங்குள்ள மக்கள் அதிக உள்கட்டமைப்பு வசதிகளை எதிர்பார்க்கிறார்கள்.ஈரோடு மாநகரை பொறுத்தவரை சமீபகாலமாக உள்கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு வருகிறது. குமாரபாளையத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சி சற்று மந்தமாக இருந்தாலும், விசைத்தறிகளுக்கு தமிழக அரசு மின்சாரத்துக்கு மானியம் அறிவித்தது அங்குள்ள நெசவுத்தொழில் செய்பவர்கள் மத்தியில் ஒரு நற்பெயரை ஆளும் தி.மு.க.வுக்கு அளித்து உள்ளது.

தீ்ர்வுகாண வேண்டிய பிரச்சினைகள்

சாயக்கழிவுகள் பிரச்சினை, காவிரி மாசு பிரச்சினை, கீழ்பவானி வாய்க்கால் பாசன பிரச்சினை, செங்காந்தள் மலர் விலை பிரச்சினை, முருங்கை விளைச்சலுக்கான விலை கிடைக்காத பிரச்சினை உள்ளிட்டவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. ஈரோடு -பழனி ரெயில் பாதை திட்டம். ரெயில்வே நுழைவுபாதைகளால் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினை உள்ளிட்டவையும் தீர்க்க முடியாத பிரச்சினைகளாக உள்ளன.

மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, கரும்பு, நெல் என்று விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை இல்லாதது ஆகியவை தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளாக விவசாயிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதிக்கவேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்பதும் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் அ.கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அ.தி.மு.க. நேரடியாக களத்தில் நின்றது. இந்த தேர்தலில் முதல் 5 இடங்கள் பிடித்தவர்கள் வருமாறு:-

அ.கணேசமூர்த்தி (ம.தி.மு.க.) 5,63,591

மணிமாறன் (அ.தி.மு.க.) 3,52,973

சரவணக்குமார் (ம.நீ.ம.) 47,719

மா.கி.சீதாலட்சுமி (நாம்தமிழர்) 39,010

செந்தில்குமார் (அ.ம.மு.க.) 25,858

வாக்காளர்கள் விவரம்

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 28 ஆயிரத்து 242 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 7 லட்சத்து 40 ஆயிரத்து 298 பேர். பெண்கள் 7 லட்சத்து 77 ஆயிரத்து 63 பேர். 3-ம் பாலினத்தவர்கள் 181 பேர் உள்ளனர்.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

குமாரபாளையம் 2,55,717

ஈரோடு கிழக்கு 2,30,470

ஈரோடு மேற்கு 2,95,773

மொடக்குறிச்சி 2,27,966

தாராபுரம் 2,58,819

காங்கயம் 2,59,681.


Next Story