2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது


தினத்தந்தி 24 April 2024 12:32 PM GMT (Updated: 24 April 2024 2:18 PM GMT)

கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களை உள்ளடக்கிய 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து, ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெறும்.

இதன்படி, கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதியுடன் நிறைவடைந்தது. தொடர்ந்து கடந்த 6-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று அமராவதி, சோலாபூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேரளா மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

தொடர்ந்து அமராவதியில் பேரணியில் பங்கேற்றார். இந்த நிலையில் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலில், நடிகையாக இருந்து அரசியல்வாதியான பா.ஜ.க.வின் மதுரா தொகுதி வேட்பாளரான ஹேமா மாலினி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் தன்னுடைய தொகுதியில் இன்று வாகன பேரணியில் ஈடுபட்டார். அப்போது, ஒரு குழந்தையை கையில் தூக்கியபடியே பிரசாரம் மேற்கொண்டார்.

2 முறை எம்.பி.யாக பதவி வகித்த அவர், 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ளார். இதற்கு முன் நிறைய பணிகளை செய்துள்ளோம். இன்னும் நிறைய பணிகளை செய்ய வேண்டி உள்ளது. அதனால், மக்கள் இந்த முறையும் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வார்கள் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இந்த தேர்தலில், 13 மாநிலங்களை உள்ளடக்கிய 89 தொகுதிகளில் வாக்கு பதிவானது நடைபெறுகிறது. இதில், கேரளாவுக்கான அனைத்து 20 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில் முதல்கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்கும் வாக்கு பதிவு நடைபெறும். கேரளாவில், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும், அவரை எதிர்த்து சி.பி.ஐ. கட்சியின் ஆனி ராஜாவும் போட்டியிடுகின்றனர். இதனால், 2-ம் கட்ட தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் மொத்தம் 247 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களில் 226 பேர் ஆண்கள். 21 பேர் பெண்கள் ஆவர். இதில், ஆளும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி கடுமையாக இருக்கும்.


Next Story