'தேர்தலில் போட்டியிட மக்கள் ஆதரவு தேவை' - நிர்மலா சீதாராமன் குறித்து தி.மு.க. விமர்சனம்


தேர்தலில் போட்டியிட மக்கள் ஆதரவு தேவை - நிர்மலா சீதாராமன் குறித்து தி.மு.க. விமர்சனம்
x
தினத்தந்தி 28 March 2024 1:08 PM IST (Updated: 28 March 2024 2:04 PM IST)
t-max-icont-min-icon

நிர்மலா சீதாராமனுக்கு மக்களின் ஆதரவு கிடையாது என தி.மு.க. செய்தி தொடர்பாளர் சரவணன் விமர்சித்துள்ளார்.

சென்னை,

எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் மத்திய மந்திரிகள் பலரை வேர்பாளர்களாக பா.ஜ.க. களம் இறக்கி உள்ளது. ஆனால் கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.

இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், "ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ தேர்தலில் போட்டியிடுமாறு பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா என்னை கேட்டுக்கொண்டார். ஆனால் நான் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டேன்.

தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை. மேலும் ஆந்திராவா, தமிழ்நாடா என்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால், வெற்றியை தீர்மானிக்கும் அளவுகோல் பற்றிய கேள்விகள் எழும். சாதி, மதம், ஊர் பற்றிய கேள்விகள் வரும். எனது வாதத்தை பா.ஜ.க. தலைமை ஏற்றுக்கொண்டது. அவர்களுக்கு நன்றி" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை என்றும், மக்கள் ஆதரவுதான் தேவை என்றும் கூறிய நிர்மலா சீதாராமனின் கருத்து பற்றி தி.மு.க. விமர்சித்துள்ளது. இது குறித்து தி.மு.க. செய்தி தொடர்பாளர் சரவணன் கூறியதாவது;-

"இது போன்ற வலுவற்ற காரணங்களைச் சொல்லி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து நிதி மந்திரி விலகி ஓடுகிறார் என்று தோன்றுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கு பணம் தேவையில்லை, மக்கள் ஆதரவுதான் தேவை. அது நிதி மந்திரிக்கு கிடையாது."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story