தெலுங்கானாவில் தேர்தல் கள நிலவரம் என்ன? - ஒரு பார்வை


தெலுங்கானாவில் தேர்தல் கள நிலவரம் என்ன? - ஒரு பார்வை
x
தினத்தந்தி 7 April 2024 3:32 AM GMT (Updated: 7 April 2024 5:59 AM GMT)

தெலுங்கானா ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து உருவான மாநிலமாகும்.

ஐதராபாத்,

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து உருவான மாநிலம் தெலுங்கானா. சுமார் 60 ஆண்டு போராட்டத்துக்கு பின்னர் இந்த மாநிலம் உருவானது.

வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேடக் ஆகியவை முக்கிய நகரங்களாக உள்ளன. இங்கு 119 சட்டசபை தொகுதிகளும், 17 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. இங்கு 3 கோடியே 30 லட்சத்து 37 ஆயிரத்து 113 வாக்காளர்கள் உள்ளனர்.

அசைக்க முடியாத செல்வாக்குடன் சந்திரசேகர்

தெலுங்கானா மாநில கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், இந்த கோரிக்கையை முன்வைத்தே கடந்த 2004ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.

அந்த கோரிக்கையை காங்கிரஸ் கண்டு கொள்ளாததால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினார். அவரது தொடர் போராட்டத்தின் காரணமாக, தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு சம்மதம் தெரிவித்தது. அதன்படியே மாநிலம் உருவானது.

இதையடுத்து தெலுங்கானாவின் முதல்மந்திரியாக சந்திரசேகர ராவ் பதவி ஏற்றார். தொடர்ந்து 2 முறை அவரே அங்கு ஆட்சி அமைத்தார். தெலுங்கானா மாநிலத்தில் அவரது செல்வாக்கு அசைக்க முடியாததாக இருந்தது. இதனிடையே அவர் தனது கட்சியை தேசிய கட்சியாக்கும் வகையில், பாரத் ராஷ்டிரிய சமிதி என்று பெயர் மாற்றினார்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி ஒன்றை கட்டமைக்க முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.

ரேவந்த் ரெட்டியால் எழுச்சி பெற்ற காங்கிரஸ்

அதே நேரம் தெலுங்கானாவில் அங்கீகாரத்துக்கு போராடிக்கொண்டு இருந்த காங்கிரசுக்கு, ரேவந்த் ரெட்டி தலைமைப்பொறுப்பு புதிய உத்வேகத்தை கொடுத்தது. தொடக்க காலத்தில் ஏ.பி.வி.பி. அமைப்பில் இருந்த அவர், பின்னாளில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.

பின்னர் கடந்த 2017ம் ஆண்டு காங்கிரசில் சேர்ந்தார். 'மைக்ரோ மேனேஜ்மெண்ட்' என்னும் நுண் அரசியலை கையில் எடுத்த ரேவந்த் ரெட்டி, தெலுங்கானாவில் சிறு சிறு சாதிகளையும், பழங்குடி அமைப்புகளையும் காங்கிரஸ் பக்கம் திருப்பினார்.

அவரது கடின உழைப்பால் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்கிரசை வெற்றி பெற வைத்து ஆட்சிக்கட்டிலில் ஏற்றினார். அவரே முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றார்.

தென்மாநிலங்களில் காலூன்ற முயலும் பா.ஜ.க.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. தென் மாநிலங்களில் காலூன்ற வேண்டும் என்ற முனைப்புடன் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. அதுபோல் தெலுங்கானா மாநிலத்திலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய மந்திரியாக இருந்த கிஷண்ரெட்டியை மாநில தலைவராக்கியது. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் தீவிர பிரசாரம் செய்தனர். ஆனாலும் 4 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.

ஓவைசி

இதேபோல் தெலுங்கானாவில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்இஇதேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) முக்கிய சக்தியாக திகழ்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் களம்

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்கிறது. சமீபத்தில் பெற்ற சட்டசபை தேர்தல் வெற்றியால் உற்சாகம் அடைந்துள்ள காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி, கடும் சோதனைக்கிடையே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. அக்கட்சியின் டெல்லி முகமாக இருந்த சந்திரசேகரராவின் மகள் கவிதா, டெல்லியில் நடைபெற்ற மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரசியலில் தனக்கு பக்க பலமாக இருந்த மகள் சிறைக்கு சென்றது, சந்திரசேகர ராவுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியை வெற்றி பெற வைக்க சந்திரசேகர ராவ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.

பா.ஜ.க.வை பொறுத்தவரை, சட்டமன்ற தேர்தலில் விட்ட இடத்தை, நாடாளுமன்ற தேர்தலில் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இதற்காக பா.ஜ.க. மாநில தலைவர் கிஷண்ரெட்டி தலைமையில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஒவைசியின் கட்சி பிரிக்கும் வாக்குகள் சில தொகுதிகளில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது.

வெற்றியை தக்கவைக்குமா காங்கிரஸ்?

பிரசார களத்தில் அனல் பறக்கிறது. காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. சட்டசபை தேர்தலில் கிடைத்த வெற்றியை, நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தக்க வைக்குமா? பி.ஆர்.எஸ். கட்சி ஏற்றம் பெறுமா? மாற்றத்தை ஏற்படுத்துமா பா.ஜ.க.? என்பதை மே 13ந்தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் மக்கள் முடிவு செய்ய உள்ளனர்.


Next Story