தேர்தல் வந்ததும் கச்சத்தீவு நாடகம் போடுகின்றனர் - மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனம்


தேர்தல் வந்ததும் கச்சத்தீவு நாடகம் போடுகின்றனர் - மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனம்
x

இந்தியா கூட்டணி சார்பில் பிரதமராகுபவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக நிற்பார் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்

வேலூர்,

வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எதிர்க்கட்சியாக இருக்கும் தாங்கள் எப்படி பா.ஜ.க.வை எதிர்க்க முடியும் என எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியிருக்கிறார். ஆனால், ஆளும் கட்சியாக இருக்கும் போது, பா.ஜ.க.வின் அனைத்து சட்டங்களுக்கும், அந்த புலிப்பாண்டி, எலிப்பாண்டியாக மாறி ஆதரவு அளித்தார்.

ஆனால், தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக போராடினோம். இப்போது ஆளுங்கட்சியாக ஆளுநரின் அத்துமீறல்களை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி கண்டுள்ளோம்.

இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா?. உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கில் கூட, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. மீட்க வேண்டுமானால் போர்தான் செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியது. நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பும் போதும் வெளியுறவு கொள்கைஎன்று மழுப்பலாக மத்திய அரசு பதிலளித்தது. இப்போது தேர்தல் வந்ததும் கச்சத்தீவு நாடகம் போடுகின்றனர்.

நான் உங்களிடம் கேட்கும் வாக்கு இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமல்ல,இந்த நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்க கூடாது. ஜனநாயகம் கேள்விகுறியாக விடக்கூடாது. சமூக நீதி காற்றில் பறக்க கூடாது. மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் அறவே கூடாது என்பதற்காகவும் தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்க வந்து இருக்கிறேன்.

தமிழ்நாட்டை வெறுக்கிற மோடிக்கு பதிலாக, இந்தியா கூட்டணி சார்பில் பிரதமராகுபவர் நிச்சயம் இந்திய ஜனநாயகத்தின் மீது மதிப்பும், இந்திய மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கிற பண்பும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக நிற்பார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story