தமிழ்நாட்டில் சரிவடையும் குழந்தை பிறப்பு விகிதம்.! - என்ன காரணம்? பாதிப்புகள் என்ன?


தமிழ்நாட்டில் சரிவடையும் குழந்தை பிறப்பு விகிதம்.! - என்ன காரணம்? பாதிப்புகள் என்ன?
x
தினத்தந்தி 3 Aug 2025 12:19 PM IST (Updated: 3 Aug 2025 3:58 PM IST)
t-max-icont-min-icon

தென்னிந்திய மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து மிக ஆபத்தான நிலையை அடைந்துள்ளது.

குழந்தை பிறப்பு விகிதம்

ஒரு காலத்தில் மக்கள்தொகை வளர்ச்சியில் தமிழ்நாடு அபரிமிதமாக இருந்து வந்தது. பின்னர் அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளால் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த சில வருடங்களில் தமிழ்நாட்டில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாட்டில் 9.25 லட்சம் குழந்தைகள் பிறந்த நிலையில், கடந்தாண்டு 8.47 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளது. பிறப்பு விகிதம் என்பது கடந்த 2023ஐ காட்டிலும் 2024ம் ஆண்டில் 6.09 சதவீதம் சரிந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள இந்திய மக்கள்தொகை கணக்கீட்டின்படி மக்கள்தொகை அதே அளவில் நீடிக்க ஆண்டுதோறும் பிறப்பு விகிதம் தேசிய அளவில் 2.10 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால், இந்திய அளவில் இது 1.90 சதவீதம் உள்ளது. தமிழ்நாட்டு அளவில் 1.40 சதவீதமாக உள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து மிக ஆபத்தான நிலையை அடைந்துள்ளது. அதன் விபரம்;

தமிழகம் 1.4

ஆந்திரா 1.5

தெலங்கானா 1.5

கேரளா 1.5

கர்நாடக 1.6

வட மாநிலங்களான பீகார் 3.1 சதவீதமாகவும், உத்தரபிரதேசத்தில் 2.7 சதவீதமாகவும், மத்திய பிரதேசத்தில் 2.9 சதவீதமாகவும் உள்ளது.

என்ன காரணம்?

பொருளாதார நிலை, அதிகரித்து வரும் செலவு உள்ளிட்ட பல காரணங்களால் பல பெற்றோர்களும் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வருகிறது. சரியான பருவத்தில் திருமணம் செய்து கொள்வதற்கும் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் திட்டமிட்டு இடையூறு ஏற்படுத்தியதால் சீனா ஜப்பான் கொரியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இன்று நிலை தடுமாறி நிற்கின்றன. அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதை அநாகரிக கலாசாரம் என்று மக்களின் சிந்தனையில் பதித்தனர். வலுக்கட்டாயமாக குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை செயல்படுத்தினர்.

பாதிப்புகள் என்ன?

நாட்டிலேயே முதியோர்கள் அதிகமுடைய மாநிலமாக தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் முதியோர் எண்ணிக்கை கூடி அவர்கள் ஆதரவற்று விடப்படும் நிலை உண்டாகும். குடும்பங்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும். ஆண்கள் மீது பொருளாதார சுமைகளும் சமூகப் பொருப்புகளும் அதிகரிக்கும். தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்து அரசியல் அதிகாரத்திலும் நாட்டின் வளங்கள் பகிர்விலும் பெரும் இடைவெளிகள் உண்டாகும். இப்போது கூட வடஇந்திய தொழிலாளர்கள் இல்லாமல் தமிழகத்தில் எந்த தொழிற்சாலைகளும் உணவகங்களும் வேளாண் பணிகளும் இயங்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது.

தீர்வு என்ன?

அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஆர்வப்படுத்தி குடும்பங்கள் துவங்க பொது மேடைகள் வரை அனைத்து வகைகளிலும் விரிவான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நெருக்கடியான காலம் இது. குழந்தை பிறப்பு விகிதத்தை சரிவடைய விடாமல் அதிகப்படுத்த சரியான வயதில் திருமணம், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவதை தவிர்த்தல், உணவு பழக்கவழக்கங்கள் உள்ளிட்டவை குறித்து இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

1 More update

Next Story