தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொங்கல் விழா..!


தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொங்கல் விழா..!
x

முல்லை நிலத்தவர்கள் மாடுகளுக்கு பூக்களால் மாலையிட்டு அலங்கரித்து, உணவூட்டி, மகிழ்வூட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினர்.

தமிழன் தன் வாழ்க்கை முறையில் மிகத்தெளிவாக இருந்தவன். ஐவகை நிலங்களில், தன் தொழில் மற்றும் வருவாய் சார்ந்த வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். மருதம், முல்லை, குறிஞ்சி, நெய்தல், பாலை என அவற்றை ஐந்திணைகளாகப் பிரித்தான்.

வயல் மற்றும் வயல் சார்ந்த பகுதியே மருதம்;

காடு மற்றும் காடு சார்ந்த பகுதியே முல்லை;

மலை மற்றும் மலை சார்ந்த பகுதியே குறிஞ்சி;

கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதியே நெய்தல்;

வறண்ட, வெப்பம் நிறைந்த பகுதியே பாலை நிலம்.

இந்த நிலங்களில் ஐவகையினர் வாழ்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடியதே வியப்பானது. தமிழர் கொண்டாடிய பொங்கல் விழா மனிதநேயம் மிக்கது. கடல் பகுதியில் மீனவர்கள், தங்கள் பழைய வலைகளை எரித்துவிட்டுப் புதிய வலைகளை மாற்றும் நாளில் போகிப்பண்டிகை கொண்டாடினர். பிற நிலத்தவர்கள் அதில் மகிழ்வோடு பங்கேற்றனர்.

மறுதினம் வயல் சார்ந்த நிலத்தவர்கள் அறுவடை செய்த புத்தரிசியில் பொங்கலிட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடினர். அங்கு பிற நிலத்தவர்கள் பங்கேற்று அவர்களுடன் கூடிக்கொண்டாடினர்.

முல்லை நிலத்தவர்கள் மாடுகளுக்கு பூக்களால் மாலையிட்டு அலங்கரித்து, உணவூட்டி, மகிழ்வூட்டி மாட்டுப் பொங்கல் கொண்டாடினர். பிற நிலத்தவர் அதில் பங்கேற்றனர்.

மலை சார்ந்தவர்கள், குன்றுகளில் வாழ்பவர்கள், தேனும் தினையும் இட்டு குன்றுப் பொங்கல் கொண்டாடினர். பிற்பாடு அதுவே 'கண்ணுப் பொங்கல்' என்று திரிந்து, பிறகு 'காணும் பொங்கல்' என்றானது. பாலை சார்ந்த மக்கள் எல்லோரது பண்டிகைகளிலும் கலந்து மகிழ்ந்தனர்.

இதுபோன்ற வாழ்வியல் முறை இந்திய மண்ணில் வேறு எங்கிலும் இல்லை. உலகில் தமிழ் மொழியில் இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ் உண்டு. முத்தமிழ் என்பது போல் வேறு மொழி முப்பரிமாணமாய் அழைக்கப்படுவதுண்டா?

சங்கத்தமிழ் என்று நாம் கூறுவதுபோல், வேறு மொழி அழைக்கப்படுவதுண்டா? சங்க இலக்கியங்கள் போல் செழுமை வாய்ந்த பண்டைய இலக்கியங்கள் வேறு மொழிகளில் உண்டா? தான் பேசும் மொழியை அன்னை என்று சொன்னவர்கள் தமிழர்கள் மட்டுமே!


Next Story