ரணகளமான ரத்தினபூமி


ரணகளமான ரத்தினபூமி
x

மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் தலைகுனியச் செய்திருக்கிறது. நாட்டின் பிரதமர் முதல், கடைக்கோடி குடிமகன் வரை கோபத்தில் கொந்தளிக்கிறார்கள், வேதனையில் வெதும்புகிறார்கள்.

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே நடந்துவந்த மோசமான அத்தியாயங்களின் மிக மோசமான பக்கமாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. இனி என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை பெற்றுத் தரப்பட்டாலும், இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் ரணம் குணமாகவும், ஆழமான வலி மறையவும் வெகு நாளாகும்.

அழகிய மணிப்பூர் மாநிலம், இன்று இனப் பிரச்சினையால் பிய்த்துப் போடப்பட்டுக் கிடக்கிறது.

நாட்டின் வடகிழக்கு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் குட்டி மணிப்பூரின் மொத்த மக்கள்தொகை 34 லட்சம்தான். மலைகள், பள்ளத்தாக்குகள், காடுகள் என்று சிக்கலான நிலப்பரப்பைக் கொண்ட மாநிலம். அதைவிடச் சிக்கல், இங்குள்ள ஏராளமான இனக்குழுக்களும், அவற்றுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகளும்.

அதிலும் தற்போது சொந்த மாநிலத்திலேயே ஒருவருக்கு ஒருவர் எதிராய் யுத்த களத்தில் நிற்பதைப் போல நிற்கிறார்கள், மெய்தி இனத்தினரும், குகி பழங்குடியினரும்.

இதில் மெய்திகள்தான் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகத்தினர். இவர்கள் 53 சதவீதத்தினராய் இருக்கிறார்கள். மெய்தி, மீய்தே, மீதேய், மீய்தேய் என்ற பல பெயர்களில் அழைக்கப்படும் இவர்கள், மெய்தி மொழி பேசுகிறார்கள். 'மணிப்பூரி' என்றும் அழைக்கப்படும் இதுதான், மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி. மக்கள்தொகையில் சரிபாதிக்கு மேல் இருந்தாலும், 30 சதவீத சமவௌிப் பகுதியிலேயே மெய்தி மக்கள் வசிக்கிறார்கள்.

ஆனால் பெரும்பான்மை சமூகத்துக்கு உள்ள சாதகமாக ஆட்சியிலும், அதிகாரத்திலும் மெய்திகளே கோலோச்சுகிறார்கள். முதல்-மந்திரி பிரேன் சிங் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்தான். மெய்திகளில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள், சனமாஹி என்ற பழமையான மதத்தை பின்பற்றுவோருடன், இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை தழுவியவர்களும் குறைந்த சதவீதத்தில் உள்ளனர். மணிப்பூரின் பிற சமூகத்தினருடன் ஒப்பிடும்போது மெய்தி மக்கள் ஓரளவு வளமாக உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பில் இவர்களின் கையே ஓங்கியிருக்கிறது.

மெய்திகளுக்கு அடுத்தபடியாக 24 சதவீதம் நாகா இனக்குழுக்களும், 16 சதவீதம் குகி பழங்குடியின மக்களும் உள்ளனர்.

இந்த இனங்களுக்கு உள்ளும் பல துணைப்பிரிவுகள் உண்டு. ஆனால் அனைத்து குகி பிரிவுகளிலும் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்.

அதேபோல மெய்திகள் சமவெளி சமூகத்தினர் என்றால், குகிகள், நாகாக்கள் மலைவாசிகள். மாநிலத்தில் சுமார் 70 சதவீதமாய் உள்ள மலைப்பிராந்தியம் முழுவதும் இவர்களைப் போன்ற பழங்குடி இனத்தவரின் ராஜ்ஜியம்தான்.

இன்று மெய்திகளும், குகிகளும்தான் ஒருவரையொருவர் வில்லன்களாய் வெறுக்கிறார்கள், குரோதத்தோடு, கொலை வெறியோடு அலைகிறார்கள்.

அருகருகே வசிப்பவர்கள் இடையே நிலவும் போட்டியும், பொறாமையும் மெய்திகள், குகிக்கள் இடையே ஆண்டாண்டு காலமாய் உண்டு. மணிப்பூர் என்ற மாநிலம் உருவாவதற்கு முன்பிருந்தே இவர்களுக்கு இடையில் உரசல் தீப்பொறிகள் பறந்துவந்திருக்கின்றன. ஆனால் அது பெருநெருப்பாய் வெடித்திருப்பது, தற்போதுதான். அதற்கு காரணம், மணிப்பூர் ஐகோர்ட்டு தீர்ப்பு என்பதுதான் வேதனையான வேடிக்கை.

குகிகள் பட்டியல் பழங்குடி இனத்தினர். அதே அந்தஸ்தை பெரும்பான்மை மெய்தி சமூகத்துக்கும் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது, மணிப்பூர் ஐகோர்ட்டு. அதனால் மெய்திகளுக்கு பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகளும், அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் இடஒதுக்கீடும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

மேலும், மலைப்பகுதிகளில் நிலங்களை வாங்குவதற்கான வாய்ப்பும் மெய்திகளுக்கு உருவானது.

தங்களின் நிலத்துடன், கல்வி, வேலைவாய்ப்பு பறிபோகும் என்ற பயம் குகி மக்கள் மத்தியில் பரவியது. ஏற்கனவே தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக பொருமிக் கொண்டிருந்த குகிகளின் குமுறல், கொதிநிலையை எட்டியது.

ஆனால் அது வெடித்துச் சீறிக் கிளம்பியது, கடந்த மே 3-ந் தேதிதான். அன்றுதான், 'மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர்கள் சங்கம்', 'பழங்குடி ஆதரவு பேரணி'க்கு அழைப்பு விடுத்து, நடத்தியது.

அமைதியாய் ஆரம்பித்த அந்த பேரணி, வன்முறை வடிவெடுத்தது. மெய்தி மக்கள் அதிகமாய் வாழும் இம்பால் பள்ளதாக்கு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

மெய்திகளும் பதிலடி கொடுத்தார்கள். குகி மக்களின் வீடுகளை குறிவைத்து தாக்கினர். இப்படி இரு தரப்பு வன்முறையாளர்களும் திருப்பித் திருப்பி தாக்கிக்கொள்ள, இரு பக்கமும் பாதிக்கப்பட்டது என்னவோ அப்பாவி பொதுமக்கள்தான். குகிகள் மலைப்பகுதிகளுக்கும், மெய்திகள் சமவெளிக்கும் இரவோடிரவாக தப்பியோடினார்கள்.

தற்போது, வாழ்விடம் இழந்து, வாழ்வாதாரம் பறிபோய், எதிர்காலம் என்னவாகுமோ என்ற ஏக்கப் பார்வையுடன் சுமார் 60 ஆயிரம் பேர், நிவாரண முகாம்களில் உட்கார்ந்திருக்கிறார்கள். 150-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயிருக்கின்றன. ஏராளமான வீடுகள், வெறும் சாம்பல் மேடுகளாகவே எஞ்சியிருக்கின்றன.

ஐகோர்ட்டு உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிற்பாடு நிறுத்திவைத்து விட்டாலும், அதற்குள் காட்டுத் தீ போல கலவரம் பரவிவிட்டது. கட்டுப்பாட்டை மிஞ்சி விட்டது.

இந்த இனக் கலவரம் தொடர்பாக, இயல்பாகவே, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. மீது விமர்சனக் கணைகள் பாய்கின்றன. என்றபோதும், கலவரத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவே செய்திருக்கிறது. 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் இனப் பிரச்சினை என்பதால், பாதுகாப்பு படையினர் நிதானமாக காலடி வைக்க வேண்டியிருக்கிறது. கலவரப் பகுதிக்கு ராணுவத்தினர் விரையும்போது அங்கு பெண்கள் முன்வந்து தடுத்ததையும், அப்போது ஓர் இளம் ராணுவ அதிகாரி, 'மெய்தி, குகி இரு தரப்பினரையும் காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதற்காகவே வந்திருக்கிறோம்' என்று பொறுமையோடு விளக்கிக் கூறி ராணுவ அணி முன்னேற வழி ஏற்படுத்திக்கொடுத்ததையும் தான் நேரில் கண்டதாக ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார்.

உள்துறை மந்திரி அமித்ஷா மணிப்பூர் சென்று சமரச முயற்சிகளில் ஈடுபட்டார். (தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளை கண்ட அவர் திகைத்து, பேச்சற்று நின்றுவிட்டார் என்கிறார், மாநில உயர் அதிகாரி ஒருவர்.) ஆனால் அது பலன் தரவில்லை. மெய்தி, குகி இரு தரப்புமே சமாதானத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பது கவலைக்குரிய விஷயம்.

தாங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் தனி 'குகிலாந்து' மாநிலம்தான் ஒரே தீர்வு என்கிறார்கள் குகிகள். அது சாத்தியமேயில்லை என்று எதிர்க்கிறது மெய்தி தரப்பு. பெரும்பான்மையினரான தங்களை சிறுபான்மை குகி இனத்தினர் அச்சுறுத்துவதா என்ற 'ஈகோ' அவர்களுக்கு உள்ளது. மியான்மர் நாட்டில் வாழும் சின் இனத்தினர், குகிகளுடன் பாரம்பரிய ரீதியாக நெருங்கிய தொடர்புடையவர்கள். அவர்கள் அதிகமாக, அதிவேகமாக மணிப்பூருக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் குகிகள் வருங்காலத்தில் தங்களை வீழ்த்திவிடுவார்கள் என்ற அச்சமும் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.

ஆக, ரத்தின பூமியான இந்த மாநிலத்தில் (ஆம், 'மணிப்பூர்' என்பதற்கு சமஸ்கிருத மொழியில் இதுதான் அர்த்தம்) அமைதி அருகில் தெரியவில்லை.

ஆனால் உடல்ரீதியாக பலவீனமான பெண்களை வன்முறையாளர்கள் வதைப்பதையும், அவர்களின் நிர்வாண உடல்களை வெற்றியின் அடையாளமாக முன்னிறுத்தும் வெறித்தனத்தையும்தான் நாட்டு மக்கள் வெறுக்கிறார்கள். ஆங்காங்கே போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.

இன்று நாம் நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக நம்மை நாமே மெச்சிக்கொள்கிறோம். இந்த உலகத்துக்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்தவர்கள் இந்தியர்கள்தான் என்று பெருமைப்படுகிறோம். ஆனால் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய 'நாட்டுமிராண்டிகளும்' நம்மிடையேதான் இருக்கிறார்கள் என்பது அவமானச் சாக்கடையில் நம்மை தள்ளுகிறது. இவர்களைப் போன்ற இழிபிறவிகளைக் கையாள, மென்மையான, 'நாகரிகமான' சட்டங்கள் எந்த அளவு போதுமானவை என்ற கேள்வியும் எழுகிறது.

சொந்தப் படை, தடை



மணிப்பூரின் பல பகுதிகளில் பல்வேறு சமூகத்தினர் தற்போது அரசு பாதுகாப்பை நம்பாமல் சொந்தப் படையை உருவாக்கியிருக்கிறார்கள். தங்கள் பகுதிகளில் பிறர் ஊடுருவாமல் தடுக்கும் வகையில் தடைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதைத் தாண்டிச் செல்லும் புதியவர், உயிருடன் திரும்புவது அபூர்வம். கிராமப்புறங்களில் 'எல்லைச்சாமி'களைப் போல இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் காவலுக்கு நிற்கிறார்கள். மிக நவீன ஆயுதங்கள் சர்வ சாதாரணமாக புழங்குகின்றன. அவை அனைத்தும் போலீஸ் நிலையங்களில் இருந்தும், ராணுவத்திடம் இருந்தும் கொள்ளை அடிக்கப்பட்டவை. மணிப்பூர் மலைப்பகுதியில் அபினி போதைப்ெபாருள் உற்பத்தி அமோகம். மியான்மர் போன்ற நாடுகள் வழியாக நடக்கும் போதைப்பொருள் கடத்தல் தொழிலும் மணிப்பூர் பயங்கரவாத, வன்முறைக் குழுக்களுக்கு ஆயுதங்கள் கிடைக்க வழி செய்கின்றன. அரசின், நீதியின் கரங்கள் நீளாத ஏராளமான தொலைதூரப் பகுதிகளை கொண்ட மணிப்பூரில் ஏற்கனவே பயங்கரவாத அமைப்புகளுக்கும் பஞ்சமில்லை.

'இருபுறமும் கூர்மையான கத்தி'



தற்போதைய யுகம், 'தகவல் யுகம்' என்பார்கள். ஆனால் 'தவறான தகவல் யுகம்' என்பதே பொருத்தமாக இருக்கும். சமூக வலைதளங்களிலும், அதிகாரப்பூர்வமற்ற ஊடகங்களிலும் தவறான தகவல்களும், வெறுப்பு பேச்சுகளும் கொட்டிக் கிடக்கின்றன. உறுதிப்படுத்தாத, பொறுப்பற்ற இந்த தகவல்கள், வன்முறை வெறியாட்டங்கள், அவற்றின் பரவலுக்கு முக்கிய காரணமாகின்றன. மணிப்பூர் சம்பவத்துக்கும், மெய்தி இனப் பெண்களை குகிகள் அதே போல நடத்தியதாக பரவிய சமூக ஊடக வதந்'தீ'தான் காரணம் என்று கூறப்படுகிறது. இது, 'தகவல் தொழில்நுட்பம், இருபுறமும் கூர்மையான கத்தி, அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பாதிப்பையே ஏற்படுத்தும்' என்ற கூற்றை உறுதிப்படுத்துகிறது. அதேவேளையில், 70 நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் வெளியுலக பார்வைக்கு வந்ததும் தகவல் தொழில்நுட்பத்தால்தான். இல்லாவிட்டால், மணிப்பூர் மலைகளுக்கு உள்ளேயே அந்த அநீதி அமுங்கிப் போயிருக்கும்.


Next Story