கலைத்தாயின் தவப்புதல்வன் சிவாஜிகணேசன்


கலைத்தாயின் தவப்புதல்வன் சிவாஜிகணேசன்
x

இன்று (ஜூலை 21) நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள்.

பட்டமே பெயராக நிலைத்த மாபெரும் கலைஞன்.

தமிழ் சினிமா என்ற சாம்ராஜ்ஜியத்தில் கிரீடம் தரிக்காத சக்கரவர்த்தியாக கோலோச்சிய கலைத்தாயின் 'தவப்புதல்வன்'.

உழைப்பால் 'உயர்ந்த மனிதன்'.

'சிவகாமியின் செல்வன்' வழிநின்ற 'உத்தமபுத்திரன்'.

இந்த 'படிக்காத மேதை' பொதுவாழ்வில் நடிக்காத மேதை. மொத்தத்தில் 'அவன்தான் மனிதன்'.

தான் ஏற்ற பாத்திரங்கள் மூலம் ஒவ்வொரு தமிழ்க்குடும்பத்திலும் பாசமுள்ள அண்ணனாக-நேசமுள்ள தம்பியாக-பொறுப்புள்ள தந்தையாக-தியாகம் செய்யும் நண்பனாக-கடமை தவறா போலீஸ் அதிகாரியாக-சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மருத்துவராக-சுதந்திர போராட்ட தியாகியாக வாழ்ந்த மக்கள் கலைஞன்.

நடிப்பில் இரு வகை உண்டு.

எந்த பாத்திரத்தில் நடித்தாலும் திரையில் அந்த பாத்திரமாக வாழ்ந்து அதை மக்கள் மனதில் பதிய வைப்பது ஒருவகை. இங்கே நடிகன் தெரியமாட்டான்; அந்த பாத்திரம்தான் நடிகனிடம் ஆளுமை செலுத்தும்.

எந்த பாத்திரத்தில் நடித்தாலும் தன்னை ரசிகனிடம் நிலை நிறுத்தி வெற்றி பெறுவது மற்றொரு வகை. இங்கே பாத்திரத்தின் தன்மையை விட நடிகனின் அடையாளமே ஓங்கி நிற்கும்.

முன்னதற்கு மிகச்சிறந்த உதாரணம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்; பின்னதற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உதாரணம். இருவருமே அவரவர் பாதையில் சென்று மகத்தான வெற்றி பெற்றவர்கள்.

இருவருக்குமே அவரவர் பலமும் தெரியும்; பலவீனமும் தெரியும். அதனால்தான் வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி. பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர், பாரிஸ்டர் ரஜினிகாந்த், பாபு போன்ற பாத்திரங்களை தேர்வு செய்யும் தவறை எம்.ஜி.ஆர். செய்யவில்லை; ''நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்...'' என்று சாட்டையை சுழற்றும் வேலையை சிவாஜியும் செய்யவில்லை.

வசனங்களால் மட்டுமின்றி விழியாலும், உடல் மொழியாலும் தான் ஏற்கும் பாத்திரங்களின் உணர்வுகளை ரசிகனுக்குள் கடத்திய வித்தக கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி. பக்கம் பக்கமாக பேசும் வசனமாக இருந்தாலும் சரி; வசனமே இல்லாத காட்சியாக இருந்தாலும் சரி அவரைப்போல் முத்திரை பதித்தவர்கள் யாரும் கிடையாது. எவ்வளவு நீண்ட வசனமாக இருந்தாலும் தங்கு தடையின்றி, அருவி போல் அவரிடம் இருந்து வார்த்தைகள் கொட்டும். அவரது வசன உச்சரிப்பு திறமைக்கு 'பராசக்தி', 'மனோகரா', 'உத்தமபுத்திரன்' போன்ற பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.

ஆவேசம், கோபம், விரக்தி, இயலாமை, மகிழ்ச்சி, குதூகலம், மனப்புழுக்கம், உற்சாகம், ஏமாற்றம், பரிதவிப்பு, ஆற்றாமை என்று எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை அப்படியே முகத்தில் கொண்டு வந்து பாத்திரத்துக்கு உயிரூட்டுவதில் அவரை மிஞ்ச யாரும் கிடையாது.

தமிழை எப்படி ஏற்ற இறக்கங்களுடன் தெளிவாகவும், சரியாகவும் உச்சரிக்க வேண்டும் என்று தனது நடிப்பின் மூலம் சொல்லிக்கொடுத்தவர் சிவாஜி. அந்த வகையில் நல்ல தமிழை வளர்த்த 'வெள்ளித்திரை தமிழாசிரியர்' என்று அவரை பெருமையுடன் குறிப்பிடலாம்.

சிவாஜிகணேசனை ஒரு நடிகர் என்ற வட்டத்துக்குள் அடக்கிவிட முடியாது. நாம் பார்த்திராத-அறிந்திராத பல சரித்திர புருஷர்களுக்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்து அவர்களை நம் கண்முன் நடமாட விட்ட மகத்தான கலைஞன் அவர்.

தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனாகவும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாராகவும், மணியாச்சி ரெயில் நிலையத்தில் ஆஷ் துரையை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வீர வாஞ்சிநாதனாகவும் (சினிமா பைத்தியம்), திருப்பூர் குமரன், பகத்சிங்காகவும் (ராஜபார்ட் ரங்கதுரை) வெள்ளித்திரையில் வாழ்ந்து அவர்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததோடு, அவர்களுக்கு தேசப்பற்றை ஊட்டியவர் சிவாஜி என்றால் அது மிகையல்ல.

கட்டபொம்மனை யாரும் பார்த்ததில்லை. ஆனால் ''அந்த மாவீரன் இப்படித்தான் கம்பீரமாக இருந்தான்; ஆங்கிலேயரை எதிர்த்து அவன் இப்படித்தான் கர்ஜித்தான்'' என்று தனது நடிப்பின் மூலம் அந்த குறுநில மன்னனுக்கு உருவம் கொடுத்து ஒவ்வொருவரின் மனதிலும் பதியச் செய்தவர் சிவாஜி. இப்படித்தான் 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சிதம்பரனார், திருப்பூர் குமரன், சாம்ராட் அசோகன், மாவீரன் அலெக்சாண்டர் போன்றோரையும் அவர் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

தில்லானா மோகனாம்பாளில் நாதசுர கலைஞர்களுக்கே உரிய மிடுக்கு, கம்பீரத்துடன் சிக்கல் சண்முகசுந்தரமாகவே வாழ்ந்து இருப்பார்.

பல படங்களில் புராண கதாபாத்திரங்களிலும், கடவுள் பாத்திரங்களிலும் தோன்றி அந்த பாத்திரங்களாகவே வாழ்ந்தவர் சிவாஜி. என்.டி.ராமராவ் ராமர், கிருஷ்ணர் வேடங்களுக்கு பொருத்தமாக இருப்பது போல், சிவபெருமான் வேடத்துக்கு மிகவும் கச்சிதமாக இருப்பார் சிவாஜி. 'திருவிளையாடல்' படத்தில் அவரது தோற்றத்தையும், நடிப்பையும் பார்த்த மக்கள், சிவபெருமான் என்றால் இப்படித்தான் இருப்பார் என்ற முடிவுக்கு வந்தனர். அந்த தோற்றத்தில்தான் என்ன ஒரு கம்பீரம்..! மிடுக்கு...! அந்த காலத்தில் திருவிளையாடலை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள், ''சிவபெருமானுக்கே உருவம் கொடுத்தவர்யா!'' என்று அவரை புகழ்ந்தனர்.

'சரஸ்வதி சபதம்' படத்தில் நாரதராக வந்து முப்பெரும் தேவியரை உசுப்பேற்றுவதில் காட்டும் லாவகம் என்ன? 'கந்தன் கருணை'யில் முருகப்பெருமானின் தளபதி வீரபாகுவாக வந்து சூரபத்மனுடன் மோதும் போது காட்டும் விவேகம்தான் என்ன? 'திருமால் பெருமை'யில் பெரியாழ்வாராகவும், 'திருவருட்செல்வரில்' திருநாவுக்கரசராகவும் வாழ்ந்து காட்டும் பணிவுதான் என்ன? இப்படி ஒவ்வொரு பாத்திரத்துக்கும் ஒவ்வொரு தோற்றம், உடல் மொழி, குரல் என்று நடிப்புக்காகவே அவதரித்த பிறவிக் கலைஞன் சிவாஜி.

'சம்பூர்ண ராமாயணம்' நாடகத்திலும், படத்திலும் சிவாஜி பரதனாக நடித்து இருப்பார். அவரது நடிப்பை பார்த்து வியந்த மூதறிஞர் ராஜாஜி, ''நான் பரதனை கண்டேன்'' என்று பாராட்டினார்.

உறவுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள், மனப்போராட்டங்கள், இயலாமை, தியாகம், ஏழ்மை, பாகுபாடு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய ஏராளமான குடும்ப படங்களில் சிவாஜி நடித்து இருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்த அந்த படங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன. ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான 'ப' வரிசை படங்களான 'பதிபக்தி', 'படிக்காத மேதை', 'பச்சை விளக்கு', 'படித்தால் மட்டும் போதுமா', 'பழனி', 'பாசமலர்', 'பாலும் பழமும்', 'பாகப்பிரிவினை', 'பார்த்தால் பசி தீரும்', 'பாலாடை' போன்ற படங்களில் சிவாஜியின் நடிப்பை பார்த்தவர்கள் அவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதினார்கள். அவரது நடிப்பில் ஐக்கியமாகி தியேட்டர்களில் கண்ணீர் விட்ட பெண்கள் ஏராளம்.

'பாசமலர்' ராஜசேகரனையும், 'பச்சை விளக்கு' சாரதியையும் பார்த்துவிட்டு இப்படியொரு அண்ணன் தங்களுக்கு கிடைக்கமாட்டானா? என்று ஏங்கிய பெண்கள் ஏராளம். 'படிக்காத மேதை'யில் வெகுளியாக வரும் ரங்கனை பார்த்தவர்கள் இப்படி ஒரு விசுவாசி யாருக்கு கிடைப்பார்கள்? என்று ஆச்சரியப்பட்டார்கள். 'நெஞ்சிருக்கும் வரை' ரகுவை கண்டவர்கள், தான் நேசித்த பெண் நண்பனுக்கு மனைவியான பின் அவளை தங்கையாக கருதி அவள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்யும் இப்படிப்பட்ட காதலனும் இருக்கிறானா? என்று அதிசயித்தார்கள்.

'தங்கப்பதக்கம்' எஸ்.பி. சவுத்ரியின் கம்பீரத்தையும், நேர்மையையும் பார்த்து போலீஸ் வேலையில் சேர ஆசைப்பட்ட இளைஞர்கள் ஏராளம்.

ஆச்சரியம், பயம், மகிழ்ச்சி, வீரம், கருணை, கோபம், சாந்தம், அருவருப்பு, சிருங்காரம் ஆகிய குணங்களை கொண்ட 9 வகையான பாத்திரங்களில் சிவாஜி தோன்றிய 'நவராத்திரி' அவருக்கு நூறாவது படமாக அமைந்ததோடு, அவரது சாதனையில் ஒரு மைல்கல்லாகவும் விளங்குகிறது. ஒரே படத்தில் நவரச பாவங்களையும் தனித்தனி பாத்திரங்கள் மூலம் சிவாஜியை தவிர வேறு யாராலும் அவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்தி இருக்க முடியாது.

'முதல் மரியாதை' படத்தில் படுக்கையில் கிடக்கும் போது விழிகளையும், உதட்டையும் அசைத்தே மனதில் உள்ள உணர்ச்சிகளை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார்.

இப்படி சிவாஜி ஏற்று நடித்த பாத்திரங்கள் சமுதாயத்தில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தின.

அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விதவிதமான குடும்ப பாத்திரங்களிலும், சரித்திர-புராண பாத்திரங்களிலும் நடித்து சாதனை படைத்து இருக்கிறார். என்றாலும் தந்தை பெரியாராகவும், ஆங்கிலேயருக்கு எதிராக தனி ராணுவத்தை உருவாக்கி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகவும் நடிக்காத மனக்குறை அவருக்கு இருந்தது.

பாடல் காட்சிகளில் சிவாஜியின் நடை உடை பாவனைகளும் ஸ்டைலும் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருக்கும். பாடல் வரிகளுக்கு அவரைப் போல் பொருத்தமாக உதட்டசைவு கொடுப்பவர்கள் யாரும் இல்லை. 'தெய்வமகன்' படத்தில் ஜெயலலிதாவை உசுப்பேற்றுவதற்காக பாடும் ''காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி வழி போகும் என்று'' பாடல் காட்சியிலும், 'அவன்தான் மனிதன்' படத்தில் காதலி மஞ்சுளாவை வர்ணித்து பாடும் ''ஊஞ்சலுக்கு பூச்சூட்டி ஊர்வலத்தில் விட்டாரோ'' பாடல் காட்சியிலும் அவர் நடக்கும் ஸ்டைலை பார்த்துக் கொண்டே இருக்கலாம். 'திருவருட் செல்வர்' படத்தில் ''மன்னவன் வந்தானடி'' என்று பத்மினி பாடியபடி ஆட, மன்னர் தோற்றத்தில் நடந்து வரும் சிவாஜியின் மிடுக்குதான் என்ன? அமர்ந்திருக்கும் தோரணைதான் என்ன? இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதே சிவாஜி, 'பாகப்பிரிவினை' படத்தில் ஒரு கை விளங்காதவராக, தனது உடலை குறுக்கியபடி மலங்க மலங்க விழித்துக் கொண்டு தனது இயலாமையை வெளிப்படுத்தும் போது அவரது பரிதாப நிலையை நிலைத்து நம் கண்கள் கலங்கும். ''ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ!'' என்று அவர் பாடும் போது துக்கம் நம் நெஞ்சை அடைக்கும்.

'இருமலர்கள்' படத்தில் ''மகராஜா ஒரு மகராணி'' பாடலில் அவரது மகளான சிறுமி ரோஜாரமணி, ''ஓடிப்பிடித்து விளையாட ஒரு தம்பி பாப்பா வேண்டும் என் கூட'' என்று கேட்க, அதற்கு சிவாஜி, ...''ராணியம்மா மனசு வச்சா எதுவும் நடக்குமம்மா. ராஜாவுக்கும் அதுபோல் ஆசை நாள்தோறும் இருக்குதம்மா''... என்று ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தபடி மனைவி கே.ஆர்.விஜயாவை ஓரக்கண்ணால் பார்ப்பாரே ஒரு பார்வை... அது போதும்... ஆயிரம் விஷயங்களை சொல்லிவிடும். என்ன ஒரு நாகரிகமான வரிகள்; நயமான நடிப்பு. சிவாஜியைத் தவிர வேறு யாரால் அந்த உணர்வை அவ்வளவு கண்ணியமாக வெளிப்படுத்த முடியும்?

'சாந்தி' என்ற படத்தில் ''யாரந்த நிலவு ஏனிந்த கனவு'' என்று டி.எம்.சவுந்தரராஜன் பாடிய ஓர் அற்புதமான பாடல். மென்மையான-அமைதியான இந்த பாடலுக்கு ஓடி ஆடி நடிக்க முடியாது. கையில் ஒரு சிகரெட்டை மட்டும் வைத்து புகைத்தபடியே நடந்து பிரமாதமாக நடித்து இருப்பார் சிவாஜி. டி.எம்.எஸ்.சின் அருமையான குரலுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தான் எப்படி சிறப்பாக நடிப்பது? என்று முதல் நாள் இரவு முழுக்க அந்த நடிப்பு சக்கரவர்த்தி யோசித்ததாகவும், அப்போதுதான் இந்த 'சிகரெட் ஐடியா' அவருக்கு உதித்ததாகவும் சொல்வார்கள்.

சிவாஜி என்ற கலைஞனின் திறமையையும், சாதனைகளையும் பட்டியலிடுவது என்பது ஆற்று மணலை எண்ணுவதற்கு சமம்.

நடிகர் திலகம் பற்றி ஒருமுறை கருத்து தெரிவித்த பிரபல ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ இவ்வாறு கூறினார்... ''நடிப்புக்காகவே பிறந்தவர் சிவாஜிகணேசன். அவர் ஒரு மாபெரும் நடிகர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்காதது துரதிர்ஷ்டமே. இந்த உலகம் உள்ளவரை அவரது பெயர் நிலைத்திருக்கும்'' என்று அவர் சொன்னார்.

அது உண்மைதான். அந்த 'ரோஜாவின் ராஜா'வுக்கு அழிவேது...உலகம் உள்ளவரை மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

சிவாஜி நடித்த படங்கள்




* தமிழில் 275, தெலுங்கில் 9, இந்தி, மலையாளத்தில் தலா 2 படங்களில் நடித்துள்ள சிவாஜி, 17 படங்களில் கவுரவ வேடத்தில் தோன்றி இருக்கிறார். அவர் கடைசியாக நடித்த படம் 'படையப்பா' என்றாலும், அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'பூப்பறிக்க வருகிறோம்'. இந்த இரு படங்களுமே 1999-ம் ஆண்டு வெளியாயின.

* 7 வயது சிறுவனாக இருந்த போது அரிதாரம் பூசி மேடையில் தோன்றிய (சிவாஜி)கணேசன் முதலில் தரித்த வேடமே பெண் வேடம். ராமாயணம் நாடகத்தில் சீதையாக நடித்தார். அதன்பிறகு தொடர்ந்து பல நாடகங்களில் பெண் வேடங்களிலேயே தோன்றிய அவருக்கு பின்னர் இந்திரஜித், பரதன் போன்ற பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

* சிவாஜி நடிப்பில் வெளியான முதல் படம் 'பராசக்தி' (1952) என்றபோதிலும், அதற்கு முன்பே அவரது குரல் வெள்ளித்திரையில் ஒலித்து இருக்கிறது. 'நிரபராதி' என்ற தமிழ்ப்படத்தில் முக்கமலா கிருஷ்ணமூர்த்தி என்ற நடிகருக்கு அவர் பின்னணி குரல் கொடுத்து இருக்கிறார்.

* நடிகை அஞ்சலிதேவி தயாரிக்க சிவாஜி நடிப்பில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவான 'பூங்கோதை', 'பரதேசி' படங்கள்தான் 'பராசக்தி'க்கு முன் வெளியாகி இருக்க வேண்டியவை. ஆனால் 'பராசக்தி' படத்தின் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த படங்களின் வெளியீட்டை அஞ்சலிதேவி தள்ளிவைத்தார். இதனால் 'பராசக்தி' சிவாஜியின் முதல் படம் ஆனது.

* எம்.ஜி.ஆர். நடிப்பதாக இருந்த 'அன்று சிந்திய ரத்தம்' என்ற படத்தின் கதையைத்தான் சிறிது மாற்றி 'சிவந்த மண்' என்ற பெயரில் சிவாஜியை வைத்து இயக்கினார் ஸ்ரீதர். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமான 'சிவந்த மண்'ணில் சிவாஜி புரட்சி வீரனாக நடித்து இருப்பார். இனிய பாடல்களும், சண்டைக்காட்சிகளும் நிறைந்த இந்த படம் 1969-ல் வெளியாகி வெற்றி பெற்றது. ராஜேந்திரகுமார் கதாநாயகனாக நடிக்க இந்த படத்தை 'தர்த்தி' என்ற பெயரில் ஸ்ரீதர் இந்தியிலும் எடுத்தார். அந்த இந்தி படத்தில் தமிழில் முத்துராமன் நடித்த பாத்திரத்தில் சிவாஜி நடித்து இருந்தார். சிவாஜி நடித்த இரு இந்தி படங்களில் 'தர்த்தி'யும் ஒன்று.

* கே.பாலசந்தரின் இயக்கத்தில் சிவாஜி நடித்த ஒரே படம் எதிரொலி. இந்த படம் 1970-ல் வெளியானது.

* 'பலே பாண்டியா', 'சபாஷ் மீனா', 'ஊட்டிவரை உறவு', 'கலாட்டா கல்யாணம்', 'மூன்று தெய்வங்கள்', 'சுமதி என் சுந்தரி' ஆகிய படங்களில் சிவாஜியின் நகைச்சுவை நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. 'கலாட்டா கல்யாணம்' படத்தில் ஜெயலலிதாவை மணப்பதற்காக அவரது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க இவர் படும்பாடு வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

* 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்தில் சிவாஜிக்கு மகளாக நடித்த ஜெயலலிதா, பின்னர் பல படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


Next Story