கசக்கும் கனடா-இந்திய உறவு; நடப்பது என்ன?


கசக்கும் கனடா-இந்திய உறவு; நடப்பது என்ன?
x

நிலப்பரப்பில் இந்தியாவைவிட பெரிய நாடு கனடா. ஆனால், அங்கு மக்கள் தொகையோ சில கோடிகள்தான்.

இந்தியாவில் இருந்து வெகு தொலைவில் கனடா இருந்தாலும், இரண்டுமே இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகள். ஆனால், இப்போது இந்த இருநாடுகளுக்கும் ஏற்பட்டு இருக்கும் உரசல் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சீக்கியர்கள் வசிக்கும் பகுதியை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் எனும் நாட்டை உருவாக்க வேண்டும் என தங்கள் நாட்டில் குரல் எழுப்புகிறவர்களுக்கு கனடா அரசு அளித்துவரும் ஆதரவுதான் இந்த பிரச்சினைக்கு அடித்தளம். இதற்கு பகடைக்காயாக காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த 3 பேரின் கொலைகளை கனடா பயன்படுத்துகிறது.

அந்த 3 பேரில் ஒருவர்தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர் தனது நாட்டு குடிமகன். அவரை கொன்றதில் இந்தியாவின் உளவு அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கிறது என்று கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 18-ந் தேதி கூறினார். ஆனால் இந்தியா, உடனடியாக இதனை மறுத்தது.

யார் இந்த நிஜ்ஜார்? இந்தியாவை பொறுத்தவரை, நிஜ்ஜார், ஒரு தீவிரவாதி. தேசத்துரோகி. சர்வதேச அளவில் தேடப்படும் ஒரு குற்றவாளி.




இந்தியாவை துண்டாட விரும்பும் காலிஸ்தான் இயக்க தலைவர். அவர் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இந்தியாவில் நிலுவையில் உள்ளன. எனவே நிஜ்ஜார் உள்பட 18 பேரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று கனடா அரசை, இந்திய அரசு பல ஆண்டுகளாக கேட்டுக்கொண்டு வந்தது.

ஆனால் கனடா அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில்தான் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி கனடாவில் 2 பேரால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாகத்தான் தற்போது கனடா-இந்தியா இடையே விரிசல் ஏற்பட்டது.

கனடாவில் உள்ள ஒரு இந்திய தூதரை, உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக இங்குள்ள கனடா தூதர் ஒருவரை இந்தியா திருப்பி அனுப்பியது. மேலும் கனடா குடிமக்கள், இந்தியா வருவதற்கும் தடை போட்டது.

கடந்த 1948-ம் ஆண்டு நேருவும், 1973-ம் ஆண்டு இந்திராகாந்தியும் கனடா நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். அந்த அளவுக்கு இருநாடுகளுக்கும் நல்ல உறவு இருந்தது. அதன்பின் காலிஸ்தான் இயக்கத்தின் செயல்பாடுகளால் இருநாடுகளும் முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றன. நமது நாடு, சுதந்திரம் அடைவதற்கு முன்பே காலிஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கை எழுந்தது.

சீக்கியர்கள் வசிக்கும் பஞ்சாப், இமாசலபிரதேசம், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள சில பகுதிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து காலிஸ்தான் நாடு அமைக்க வேண்டும் என்றும், சிம்லாவை அதன் தலைநகராக்க வேண்டும் என்று சில சீக்கிய அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதனை ஆங்கிலேயர்கள் நிராகரித்து விட்டனர். சுதந்திரத்திற்கு பிறகு, பாகிஸ்தானில் இருந்த சீக்கியர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தோடு தங்களை இணைத்து கொண்டனர். இருந்தாலும் தொடர்ந்து காலிஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கையை சிலர் வலியுறுத்தி வந்தனர். அடிக்கடி இது தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்தன. மேலும் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்களும் அரங்கேறின. படுகொலைகளும் நடந்தன.

இதற்கு அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார். காலிஸ்தான் என்ற தனி நாடு கேட்டவர்கள் ராணுவத்தினர் மூலம் வேட்டையாடப்பட்டனர். அப்போது தனி நாடு கோரிக்கையில் முக்கிய பங்கு வகித்த ஜர்னைல் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் அமிர்தசரஸ் பொற்கோவிலில் தஞ்சம் புகுந்தனர். 1984-ம் ஆண்டு புளுஸ்டார் ஆபரேஷன் மூலம் இந்திய ராணுவத்தினர் பொற்கோவிலில் நுழைந்து அவர்களை சுட்டுக்கொன்றனர். அதற்கு பதிலடியாகத்தான், இந்திராகாந்தி தனது 2 சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். அதன்பின் ஏற்பட்ட வன்முறைகளில், வடமாநிலங்களில் இருந்த சீக்கியர்கள் மீது தாக்குதல்கள் பெரும் அளவில் நடத்தப்பட்டன. அதனால் தனி நாடு கோரிக்கை முற்றிலும் இந்தியாவில் அடங்கி போனது. பஞ்சாப்பிலும் இந்த கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில்தான் கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டங்களை தொடங்கின. மேலும் காலிஸ்தான் தனி நாட்டிற்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீவிர பிரசாரத்தை தொடங்கினர். இந்த போராட்டம் கனடா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள சீக்கியர்களிடம் பரவியது. இது குறித்து தனது கவலையை தெரிவித்த இந்தியா, கனடாவில் உள்ள காலிஸ்தான் இயக்கத்துக்கு தடை போட வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் அதனை கனடா கண்டு கொள்ளவில்லை.

இதற்கிடையில் துபாயில் நீண்ட நாட்கள் வசித்து வந்த காலிஸ்தான் இயக்க ஆதரவாளர் அம்ரீத்பால் சிங், கடந்த ஆண்டு (2022) பஞ்சாப் வந்து குடியேறினார். இங்கு பஞ்சாப் வாரிசுகள் என்ற இயக்கத்தின் தலைவராக பொறுப்பேற்று, இளைஞர்களுக்கு காலிஸ்தான் தொடர்பாக மூளைச்சலவை செய்தார்.

இந்தநிலையில் ஒரு வாலிபர் கடத்தப்பட்டது தொடர்பாக அம்ரீத்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே அம்ரீத்பால் சிங் தலைமறைவானார். ஆனால் அவரது ஆதரவாளர், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அதனை கண்டித்து, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் அம்ரீத்பால் சிங் ஆதரவாளர்களால் சூறையாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பஞ்சாப்பில் பல இடங்களில் கலவரம் வெடித்தது. போலீசார், அம்ரீத் பால் சிங்கை தீவிரமாக தேடினர். அவர் மீதான இந்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த மார்ச் 18 மற்றும் 19-ந் தேதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, லண்டனில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். அங்குள்ள இந்திய அதிகாரிகளை கொலை செய்து விடுவோம் எனவும் அவர்கள் எச்சரித்தனர்.

இந்த செயல், இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டியது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அம்ரீத்பால் சிங்கை, தேசிய புலனாய்வு அமைப்பினர் மார்ச் மாதம் 23-ந் தேதி பஞ்சாப்பில் கைது செய்து அசாம் சிறையில் கொண்டு போய் அடைத்தனர். இந்த சம்பவத்திற்கு மீண்டும் இந்திய தரப்பில் இருந்து கனடாவை தொடர்பு கொண்டு இந்தியாவிற்கு எதிரான காலிஸ்தான் போராட்டத்திற்கு கனடாவில் இருந்துதான் திட்டம் தீட்டப்படுகின்றன.

இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் சம்பவத்திற்கும் கனடாவில் உள்ள சில சீக்கியர்கள் தான் காரணம் என்று கூறியது. மேலும் 20-க்கும் மேற்பட்ட சீக்கியர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் கனடா அரசு அதனை மீண்டும் மறுத்தது.

இதன்தொடர்ச்சியாக கனடாவில் உள்ள கோவில்கள் மற்றும் தூதரகங்களுக்கு மிரட்டல்கள் வர தொடங்கின. இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, காலிஸ்தான் இயக்க கமாண்டோ படைத்தலைவர் பரந்தீப்சிங் பஜ்வார் என்பவர் மே மாதம் 6-ந் தேதி மர்ம நபர்களால் பாகிஸ்தானில் சுட்டு கொல்லப்பட்டார்.

லண்டன் இந்திய தூதரகத்தில் மார்ச் 19-ந் தேதி கலவரம் செய்து அங்கிருந்த இந்திய கொடியை கழற்றி கீேழ தூக்கிப்போட்ட காலிஸ்தான் ஆதரவாளர் அவதார்சிங் கண்டா ஜூன் 15-ந் தேதி லண்டனில் மர்மமான முறையில் இறந்து போனார். விஷம் வைத்து அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. 3-வதாக காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் ஜூன் மாதம் 18-ந் தேதி சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த 3 கொலைகளால் மிரண்டு போன காலிஸ்தான் அமைப்பினர், அதற்கு எல்லாம் இந்திய அரசின் உளவு அமைப்பான "ரா"தான் காரணம் என முழுமையாக நம்புகின்றனர். இது போன்ற கொலைகள் தொடர்ந்தால், வெளிநாடுகளில் காலிஸ்தான் செயல்பாடுகள் முடிவுக்கு வந்து விடும் என்று அவர்கள் நம்புகின்றனர். எனவே கொலைகள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்பதற்காக கனடா சீக்கிய அமைப்புகள், கனடா அரசுக்கு அழுத்தம் தருகின்றன.

அதனால் கனடா, காலிஸ்தான் ஆதரவாளர்கள் இனி கொல்லப்படக்கூடாது என்பதை நோக்கமாக வைத்து செயல்பட தொடங்கி உள்ளது. எனவேதான் தனது நட்பு நாடுகளான "5 கண் அமைப்பில்" கனடா புகார் சொல்லி இந்தியாவிற்கு நெருக்கடி தர பார்க்கிறது.

ஜி7, ஜி20, பிரிக்ஸ் போன்று கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகளை கொண்டது, 5 கண்கள் அமைப்பு. இந்த நாடுகளுக்குள் ஏதாவது ஒரு நாட்டிற்கு பிரச்சினை என்றால் மற்ற நாடுகள் துணை நிற்க வேண்டும். அதே போல் உளவு தகவல்களை 5 நாடுகளும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும்.

அந்த அடிப்படையில்தான் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியாவிற்கு எதிரான ஆதாரங்களை 5 கண்கள் அமைப்பில் கனடா பகிர்ந்து கொண்டு உள்ளது. இதனை அமெரிக்காவும் தற்போது உறுதி செய்துள்ளது. எனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் மூலம் இந்தியாவிற்கு கனடா அழுத்தம் தர நினைக்கிறது. இந்த அழுத்தம் காரணமாக, எதிர்காலத்தில் காலிஸ்தான் இயக்கத்தினர் கொல்லப்படுவது தடுக்கப்படும் என்று கனடா நம்புகிறது.

அதே வேளையில் சீனாவும் அதன் பின்னணியில் இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். கொரோனாவுக்கு பிறகு சீனாவிற்கும், மேற்குலக நாடுகளுக்கும் இடையே முட்டல் மோதல்தான் இருந்து வருகிறது. எனவே அவர்கள் சீனாவிற்கு பதிலாக இந்தியாவை நம்பகமான நட்பு நாடாக பார்க்கின்றனர். தனது நாட்டிற்கான முதலீடுகள் இந்தியாவிற்கு போவதை சீனா விரும்பவில்லை. எனவேதான் சீனா, கனடாவை தூண்டி விடுகிறது என்ற சர்ச்சையும் எழுந்து இருக்கிறது. ஆனால் ஏற்கனவே சீனாவிற்கும், கனடாவிற்கும் நட்பு நல்ல நிலையில் இல்லை. இருந்தாலும் எதிரிக்கு, எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இவர்கள் செயல்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை இந்த விவகாரத்தில், கொலைக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதையே பதிலாக தந்து கொண்டு இருக்கிறது. மேலும் கனடா இந்த விவகாரத்தை கிளப்பி கொண்டு இருந்தால் கனடாவில் உள்ள காலிஸ்தான் அமைப்பினரை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக அரங்கில் இந்தியாவில் பதிலடியாக எடுத்து வைக்கும். அது கனடாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.


"மோடி, பசுத்தோல் போர்த்திய புலி" -அமெரிக்காவிடம் கனடா சொன்னது



கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் தந்தை பியரே ட்ரூடோ. இவரும் கடந்த 1968 முதல் 1979 வரையும், 1980 முதல் 1984-ம் ஆண்டு வரையும் பிரதமராக இருந்தார். இவரும் ஆரம்பத்தில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் இந்திராகாந்தியின் கடும் நெருக்கடியால், அந்த எண்ணத்தில் இருந்து சற்று விலகி இருந்தார். தற்போது அவருடைய மகன் ஜஸ்டீன் ட்ரூடோ, தான் பதவியேற்ற நாளில் இருந்தே காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். அவர் முதல் முறையாக 2015-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றபோது, அவரது மந்திரிசபையில் 4 சீக்கியர்கள் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அப்போது அவர், இந்தியாவில் கூட இந்த எண்ணிக்கையில் சீக்கிய மந்திரிகள் இல்லை. ஆனால் கனடாவில் இருக்கிறார்கள் என்று கூறினார். இவர் பொறுப்பேற்றதில் இருந்தே, காலிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்து வந்ததால் இந்தியாவிற்கும், அவருக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் முதல் முறையாக 2018-ம் ஆண்டு ஜஸ்டீன் ட்ரூடோ ஒரு வார பயணமாக இந்தியா வந்தார். அப்போது அவருக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்று இந்தியா மீது குற்றச்சாட்டு எழுந்தது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது, விவசாயிகளுக்கு ஆதரவாக ஜஸ்டீன் ட்ரூடோ பேசினார். அதற்கு இந்தியா கடும் எதிர்வினை ஆற்றியது. எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்தது.

தற்போது நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்றபோது, மோடி கைகொடுத்த போது, அவர் பதிலுக்கு சரியாக கைக்கொடுக்காமல் இருந்தார் எனவும் தகவல் வெளியானது. மேலும் இருநாட்டு பிரதமர்கள் இடைேய நடந்த பேச்சுவார்த்தையின்போது, காலிஸ்தான் இயக்கத்திற்கு கனடாவில் தடை விதிக்க வேண்டும். அந்த இயக்கத்தில் தீவிரவாத செயல்களில் தொடர்புடையவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மோடி கூறினார்.

அதற்கு ஜஸ்டீன் ட்ரூடோ உடனே மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அதன்பின்தான் ஜஸ்டீன் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருக்கிறது என்று பகிரங்கமாக தெரிவித்தார். அதனால் அந்த பேச்சுவார்த்தை சிலநிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

அதன்பின் ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் பேசிய ஜஸ்டீன் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்கு தொடர்பு இருக்கிறது. மோடி, ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. அவர் வெளியில் ஒரு ஜனநாயகவாதி போல் பேசுகிறார். ஆனால் அவரின் செயல்பாடுகள் சர்வாதிகாரமாக இருப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் ஜோ பைடன், அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்துவிட்டார்.

ஏனென்றால் காலிஸ்தான் அமைப்பினர், அமெரிக்காவில் முக்கிய நகரான சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தை தாக்கியதை ஜோபைடன் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனால், நிஜ்ஜார் விவகாரத்தில் கனடாவுக்கு பைடன் எந்த உத்தரவாதமும் தரவில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதே ஜஸ்டீன் ட்ரூடோ, ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, கனடா புறப்பட்டபோது அவரது விமானம் பழுதாகிவிட்டது. உடனே அவருக்கு இந்தியா சார்பில் விமானம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை ஜஸ்டீன் ட்ரூடோ மறுத்துவிட்டார். கனடாவில் இருந்து விமானம் வந்தவுடன்தான் புறப்பட்டு சென்றார். அதுவரை டெல்லி ஓட்டல் அறையில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்தார். அந்த சமயத்தில் அவர் யாரையும் பார்க்க மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கனடாவில் சீக்கியர்களுக்கு முக்கியத்துவம்



-இந்த கேள்விக்கான பதில் சீக்கியர்களின் ஓட்டு என்ற தகவல் பரப்பப்படுகிறது. ஆனால் அதனையும் தாண்டி சில விஷயங்கள் மறைந்து இருக்கின்றன.

கனடாவின் மொத்த மக்கள் தொகை 3 கோடியே 88 லட்சம்தான். அதில் சீக்கியர்களின் எண்ணிக்கை வெறும் 7 லட்சம்தான். அதே போல் கனடாவின் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 76 லட்சம். அதில் ஓட்டு போடும் சீக்கியர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 2.5 லட்சம்தான். இந்த ஓட்டுக்காக மட்டும் கனடா, சீக்கியர்களை ஆதரிக்கவில்லை. அதே போல் சீக்கியர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் இலங்கை தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சீக்கியர்களுக்கு நிகரான முக்கியத்துவம் தரப்படுவதும் இல்லை. கனடாவில் உள்ள சீக்கியர்கள் அனைவரும் தங்கள் வாழும் பகுதிகளில் குருத்வாரா கோவில்களை கட்டி அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே அமைப்பாக ஒற்றுமையாக செயல்படுகிறார்கள். பல சீக்கியர்கள், பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ளனர். அவர்கள் கட்சி பாகுபாடின்றி, அனைத்து கட்சிகளுக்கும் தாராளமாக நிதிகளை வாரி வழங்குகிறார்கள். அதன் மூலம் ஒவ்வொரு கட்சியிலும் தங்களது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி, அந்த கட்சி எடுக்கும் முடிவுகளில் முக்கிய பங்காற்றுகின்றனர். எனவேதான் கனடா சீக்கியர்களுக்கு முக்கியத்துவம் தருகிறது. கனடாவில் உள்ள சீக்கியர்களில் பெரும்பாலானோர், காலிஸ்தான் நாடு என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்க முடியாமல் கனடா வேடிக்கை பார்க்கிறது.

தேச நலன் கொலையா?

தனது நாட்டிற்கு எதிராக செயல்படுபவர்கள், உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களை கொன்று பழிதீர்க்கும் தேச நலன் கொலைகளை எல்லா நாடுகளும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் உலக நாடுகளை பொறுத்தவரை தங்களுக்கு வந்தால் ரத்தம், அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற ரீதியில்தான் செயல்படுவார்கள்.

ஊருக்குத்தான் ஜனநாயகம், அமைதி, சட்டம் என்ற உபதேசம் எல்லாம். தனக்கென்று வந்து விட்டால் எதையும் பார்க்க மாட்டார்கள். உதாரணமாக அமெரிக்கா தனது மக்களை கொன்ற பின்லேடனை அழிக்க ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் சென்று அந்த நாட்டு மக்களை போர் என்ற பெயரில் கொன்று குவித்தது. இறுதியாக பாகிஸ்தான் அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் அந்த நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பின்லேடனை அமெரிக்கா கொன்றது.

அணு ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கிறார்கள், அதனால் அமெரிக்காவிற்கு ஆபத்து என்று ஈராக் மீது போர் தொடுத்து அந்த நாட்டு மக்களை கொன்று குவித்து இறுதியாக சதாம் உசேனை அமெரிக்கா தூக்கிலிட்டு கொன்றது.

அதே போல் சவுதி அரேபியா அரச குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்து பின்னர் அமெரிக்காவிற்கு தகவல்களை பரிமாறிய பத்திரிகையாளர் ஜமால் காசோகி, துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு உத்தரவிட்டது சவுதி மன்னர்தான் என அமெரிக்கா நேரடியாக குற்றம் சாட்டியது. ஆனால் அதனை சவுதி மறுத்துவிட்டது. பின்னர் இந்த விவகாரம் அடங்கி போனது.

சீனாவின் ரகசியங்களை வெளியிட்டதாக கூறி, சீன விஞ்ஞானி ஒருவர் அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்டார். அதே போல்தான் காலிஸ்தான் இயக்கத்தினர் 3 பேர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதற்கு, இந்தியாதான் காரணம் என சர்வதேச அளவில் சந்தேகத்தை கிளப்பி விட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் உள்ள பின்னணியை அறிந்து மற்ற நாடுகள் மவுனம் காத்து வருகின்றன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், காலிஸ்தான் இயக்க தளபதி பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். அந்த நாடு கூட இந்தியாவை குற்றம் சுமத்தவில்லை. மாறாக ரசித்தது.

ஏனென்றால் காலிஸ்தான் நாடு என்பது இந்தியாவின் பஞ்சாப் மட்டுமல்ல பாகிஸ்தானின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதுதான். அதே போல் லண்டனில் இறந்த காலிஸ்தான் இயக்கவாதி மர்ம மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை.

அந்த வழக்கிற்கு பிரிட்டீஷ் அரசு மூடுவிழா செய்துவிட்டது. ஆனால் இப்போது கனடா மட்டும் இந்தியாவை குற்றம் சுமத்தி இருக்கிறது. இதுவும் விரைவில் அமைதி நிலைக்கு போய் விடும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


கனடா பிரதமர் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்?



காலிஸ்தான் இயக்க தலைவர் நிஜ்ஜார் கொலைக்கு, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ மிகுந்த ஆர்வம் காட்டுவதற்கு மற்றோரு முக்கிய காரணமும் இருக்கிறது.

கனடாவை ஜஸ்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆட்சி செய்கிறது. அங்குள்ள நாடாளுமன்றத்தில் 338 இடங்களில், 170 எண்ணிக்கை இருக்கும் கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும். ஆனால் ஜஸ்டீன் ட்ரூடோ கட்சிக்கு 158 இடங்கள்தான் உள்ளன. எனவே 25 இடங்களை வைத்திருக்கும் புதிய ஜனநாயக கட்சி, லிபரல் கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறது. அதனால்தான் அங்கு பிரதமராக தற்போது ஜஸ்டீன் ட்ரூடோ இருக்கிறார். இந்த புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் என்பவர் ஒரு சீக்கியர். இவரது ஆதரவு இல்லாமல், அங்கு ஜஸ்டீன் ட்ரூடோவால் பிரதமராக இருக்க முடியாது. எனவேதான் ஜஸ்டீன் ட்ரூடோ இந்த விவகாரத்தில் அங்குள்ள சீக்கியர்களுக்கு ஆதரவாக மிகத்தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.


கனடாவில் கால்பதித்த சீக்கியர்கள்

இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளில் கனடாவும் ஒன்று. தற்போதும் அந்த நாட்டின் மன்னராக, இங்கிலாந்து அரசர் சார்லஸ்தான் இருக்கிறார். சுமார் 1850-ம் ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள ஆங்கிலேய படைகளில் இருந்த சீக்கிய வீரர்கள், பாதுகாப்பு பணிக்காக கனடாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் இன பாகுபாடு இருந்தது. ஆனால் கனடாவில் இன பாகுபாடு இருக்கக்கூடாது என இங்கிலாந்து ராணி உத்தரவிட்டு இருந்தார். அதனால் கனடாவிற்கு சென்ற சீக்கியர்கள் மரியாதையாக நடத்தப்பட்டனர். இது தான் சீக்கியர்கள் கனடாவிற்கு செல்ல அடித்தளம் அமைத்தது.

அதே போல் 1900-ம் ஆண்டுகளுக்கு பிறகு கனடாவின் ஒரு பகுதியை ஆக்கிரமிக்கும் விதமாக அமெரிக்காவின் செயல்பாடு இருந்தது. எனவே கனடா-அமெரிக்க எல்லையை ஒட்டி இருந்த பகுதிகளில் வெளிநாட்டினை சேர்ந்தவர்கள் குடியேற தனது கதவினை கனடா திறந்தது. அதனால் ஐரோப்பாவை சேர்ந்த ஏராளமானோர் கனடாவில் குடியேறினர். அதே போல் சீக்கியர்களும் குடியேற தொடங்கினர்.


Next Story