அரவணைப்பு ஒன்றே மருந்து..! இன்று உலக ஆட்டிசம் தினம்
ஆட்டிசம் குறைபாட்டை சரியான காலத்தில் அடையாளம் காணாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும்.
ஆட்டிசம் அல்லது மன இறுக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி உலக ஆட்டிசம் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படி கையாள வேண்டும், எப்படி அவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு தினத்தின் நோக்கம்.
மன இறுக்கம் கொண்டவர்களை ஏற்றுக்கொள்வது, அவர்களைச் சமூகத்தில் ஒதுக்கி வைக்காமல் ஆதரித்து அரவணைப்பது மற்றும் அவர்களின் உரிமைகளை வலியுறுத்துவது தொடர்பாக இந்த நாளில் உலக அளவில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மன இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வளர்ச்சி கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மக்களுக்கு புரியவைப்பதற்கும் இந்த விழிப்புணர்வு தினத்தை பயன்படுத்துகிறார்கள்.
ஆட்டிசம் என்றால் என்ன? என்று பெரும்பாலான மக்கள் அறியாமல் உள்ளனர். பலர் இன்னும் இந்த குறைபாட்டை ஒரு மனநிலை பாதிப்பு என்றே நினைக்கிறார்கள். ஆனால், இது அப்படி இல்லை. அதேசமயம் ஆட்டிசம் என்பது நோயும் அல்ல, மூளையில் ஏற்படும் ஒரு குறைபாடு மட்டுமே. அதாவது, நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு. இதை ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் (Autism Spectrum Disorder) என்கிறோம். மூளை, தகவல்களைப் பயன்படுத்தி புரிந்துகொள்ளும் திறனைத் தடுப்பது. பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம் எனப்படும்.
ஆட்டிசம் குறைபாட்டை சரியான காலத்தில் அடையாளம் காணாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும். இந்தக் குறைபாட்டைச் சீக்கிரமாகக் கண்டறிவதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும். இவ்வகைக் குறைபாடுள்ள குழந்தைகள் அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு. புத்திசாலித்தனத்துக்கும் இந்த குறைபாட்டுக்கும் தொடர்பில்லை.
குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஏதாவது ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள். அதை சிறந்த பயிற்சியின் மூலம் வெளிக்கொண்டு வரவேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
இந்த குழந்தைகளின் பிரதான பிரச்சினை மற்றவர்களோடு பழகாமல் தனித்து இருப்பதுதான். கண்களைப் பார்த்துப் பேசுவதைத் தவிர்ப்பது, தனது விருப்பத்தைக் குறிக்க ஆட்காட்டி விரலைப் பயன்படுத்திச் சுட்டிக்காட்டாமல் இருப்பது, சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும் சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது, பயம், ஆபத்து போன்றவற்றை உணராமல் இருப்பது, வித்தியாசமான நடவடிக்கைகளை, ஒரே மாதிரியாக திரும்பத் திரும்ப செய்வது, தனது தேவைகளை உணர்த்த, பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது என பல அறிகுறிகள் மூலம் இந்த குறைபாட்டை கண்டறியலாம்.
மனதளவிலும், உடலளவிலும் இவர்களுக்கு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் இவர்களால் மேம்பட்டு செயல்பட முடியும். குழந்தை பிறந்தவுடன் ஆட்டிசம் உள்ளதா? என்பதை முகபாவனை உணராமை, சத்தங்களை உணர முடியாமல் இருப்பது, கண்ணோடு கண் பார்க்காமல் இருப்பது, பேசுவதில் தாமதம் போன்ற அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நோயின் தாக்கத்தை ஓரளவிற்கு கட்டுப்படுத்தி இயல்பான வாழ்க்கையை அளிக்கும் சிகிச்சைகள் உள்ளன. முழுமையாக குணப்படுத்த முடியாது என்பதால் பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் தான் அவர்களுக்கு அதிகம் தேவை. இவர்களுக்கென தனி சிறப்பு பள்ளிகளும் உள்ளன.