ஒரு ஏக்கருக்கு 5 நிமிடத்தில் உரம் தெளிக்க முடியும்: வேளாண் பணியில் கோலோச்ச காத்திருக்கும் 'டிரோன்கள்'


ஒரு ஏக்கருக்கு 5 நிமிடத்தில் உரம் தெளிக்க முடியும்: வேளாண் பணியில் கோலோச்ச காத்திருக்கும் டிரோன்கள்
x

உரம் தெளிப்பது போன்ற வேளாண் பணியில் டிரோன்கள் கோலோச்ச காத்திருக்கின்றன. இதன் மூலம் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு 5 நிமிடத்தில் உரம் தெளிக்க முடியும். இதற்காக 200 பேருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

200 இளைஞர்கள் தேர்வு

உலகில் முதல் முறையாக வேளாண் நிலத்தில் உரம் தெளிக்கும் டிரோன்களை இலவசமாக வழங்கி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் முயற்சியில் மத்திய அரசின் கீழ் செயல்படும், இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் (ஐ.எப்.எப்.சி.ஓ.) ஈடுபட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 2 ஆயிரத்து 500 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு இதனை இலவசமாக வழங்க இருக்கின்றனர்.

அதன்படி, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தலா 200 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டிரோன்கள் இயக்குவது தொடர்பாகவும், டிரோன்கள் இயக்குவதற்கான உரிமம் பெற்று தருவதற்காகவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாக கல்லூரியுடன் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

பயிற்சி

அதன்படி, தமிழ்நாட்டில் 200 இளைஞர்களுக்கு இந்த பயிற்சி எம்.ஐ.டி.யின் வான்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொருவருக்கும் 45 மணி நேரம் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் எவ்வளவு உயரத்தில் உரத்தை தெளிக்க வேண்டும்? வானிலை எப்படி இருக்கிறது? காற்று எந்த அளவுக்கு வேகமாக வீசுகிறது? டிரோன்களை பராமரிப்பது எப்படி? என்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன. அதிலும் குறிப்பாக டிரோன்கள் பழுதாகிவிட்டால், அதனை சரிசெய்வது எப்படி? என்பது தொடர்பான கம்ப்யூட்டர் பயிற்சி 4 மணி நேரம் தனியாக வழங்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் மதிப்பில் டிரோன்கள்

இந்த பயிற்சியின் முடிவில் திறன் தேர்வும், அதன் பிறகு டிரோன்கள் பறக்கவிட சொல்வதற்கான தேர்வும் நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு டிரோன்களை இயக்குவதற்கான உரிமம் வழங்கப்படும். இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு எப்படி உரிமம் வழங்கப்படுகிறதோ? அதேபோன்று டிரோன்கள் இயக்குவதற்கும் உரிமம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்று உரிமம் பெறும் இளைஞர்களுக்கு மத்திய அரசின் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனம் டிரோன் வழங்க இருக்கிறது. இந்த டிரோனோடு சேர்ந்து அதனை எடுத்துச்செல்ல 3 சக்கர எலக்ட்ரிக் வாகனமும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்று சொல்லப்படுகிறது.

5 நிமிடத்தில் உரம் தெளிக்கலாம்

இந்த டிரோனை கொண்டு நானோ யூரியா உள்பட உரங்களை ஒரு ஏக்கர் நிலத்தில் 5 நிமிடத்தில் தெளிக்க முடியும். இதற்கு விவசாயிகளிடம் இருந்து ரூ.400 முதல் ரூ.500 வரை கட்டணம் பெறலாம் என்றும், நாளொன்றுக்கு 10 ஏக்கர் விவசாய நிலம் வரை தாராளமாக உரத்தை தெளிக்கலாம் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தருவதோடு, நல்ல வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் இது இருக்கும் என்றும் எம்.ஐ.டி.யின் வான்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் செந்தில்குமார் தெரிவித்தார். பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த டிரோன்கள், தற்போது வேளாண் பணியிலும் கோலோச்ச காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story