இது இந்தியாவின் நேரம்


இது இந்தியாவின் நேரம்
x

விண்வெளித்துறையில் மட்டுமல்ல, வேறு பல துறைகளிலும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது இந்தியா.

'பன்னெடுங் காலத்துக்கு முன்பே புகழ்பெற்று திகழ்ந்தது பாரதம். மேலைநாட்டவர் காடோடிகளாக திரிந்த காலத்திலேயே நாகரீகத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் நாம். வான சாஸ்திரத்திலும், விஞ்ஞானத்திலும் வியத்தகு சாதனைகளை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே படைத்துவிட்டோம். கடல் கடந்து வென்ற ராஜேந்திர சோழன், அகண்ட பாரதத்தை ஆண்ட அசோகர் என்று மாமன்னர்களை கண்ட மண் இது. நாலந்தா பல்கலைக்கழகத்தின் மூலம் உலகத்துக்கே நாம் பாடம் போதித்தோம்' என்று பழம் பெருமை பேசுவது நம்மில் பலரது வழக்கம். அதற்கு நேர்மாறாக, சொந்த நாட்டை மட்டம் தட்டி சுகம் காணுவது சிலரது பழக்கம்.

ஆனால் இரண்டையும் தாண்டி, இன்றைய நிலையை நிதானமாக ஆராய்ந்தால், மீண்டும் இந்தியாவின் யுகம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அதை உலகத்துக்கு உறுதிப்படுத்தி இருக்கிறது, 'சந்திரயான்-3' விண்கலத்தின் வெற்றி. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவை பிரமிப்போடு திரும்பிப் பார்க்கின்றன. நம் நாட்டு விஷயங்களை கொஞ்சம் விஷமத்தன கிண்டலோடு அணுகும் மேற்கத்திய ஊடகங்களும் உற்சாக வார்த்தைகளில் பாராட்டித் தள்ளுகின்றன. பிரிட்டீஷ் பி.பி.சி. முதல் அரபு அல் ஜசீரா வரை சந்திரயானின் சரித்திர சாதனையை உரத்து பேசுகின்றன. எப்போதும் பகைமை பாராட்டும் பாகிஸ்தானும் கூட புகழ்கிறது. அதன் முன்னணி நாளிதழ்களில் முதல்பக்கச் செய்தி சந்திரயான்தான். இந்தியாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கர்ஜிக்கும் அந்நாட்டு மந்திரிகளும், 'சிக்கனமாய் சாதித்திருக்கும் இஸ்ரோவிடம் நாம் பாடம் கற்க வேண்டும்' என்று மனந்திறந்து பாராட்டினார்கள்.

விண்வெளித்துறையில் மட்டுமல்ல, வேறு பல துறைகளிலும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது இந்தியா. இனியும் இந்த நாட்டை தவிர்க்க முடியாது உலக நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன. வெளிச்ச காலத்தை நோக்கிய இந்தியாவின் விரைவு பயணத்தை ஒரு பறவைப் பார்வையில் பார்த்தால்...

'சைக்கிளில்' தொடங்கிய சாதனை பயணம்

இன்று, பக்கத்துக்கு ஊருக்கு பார்சல் அனுப்புவது போல சரமாரியாய் விண்ணுக்கு ராக்கெட்டுகளையும், செயற்கைக்கோள்களையும் இஷ்டம் போல் ஏவிக்கொண்டிருக்கிறது 'இஸ்ரோ'. சந்திரனுக்கு 'சந்திரயான்', செவ்வாய்க்கு 'மங்கள்யான்', ஆதவனுக்கு 'ஆதித்யா', மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' என ஏக 'பிசி'யாய் இயங்கிக்கொண்டிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம். ஒரே ஏவலில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் விதைத்த விந்தையையும் புரிந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசுகளும்கூட இந்தியாவை செயற்கைக்கோள்களை அனுப்பித்தரச் சொல்கின்றன. ஆனால் இந்த சாதனைப் பயணம், மிகச் சாதாரணமாய், சைக்கிளில் தொடங்கியது என்பது எவருக்கும் ஆச்சரியம் அளிக்கும். அப்போதைய 'இன்கோஸ்பார்' ('இஸ்ரோ'வின் முந்தைய பெயர்), திருவனந்தபுரத்தையொட்டிய தும்பா என்ற குட்டி மீன்பிடி கிராமத்தில் இருந்து 1963-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி தனது முதலாவது சிறிய ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஒரு தென்னந்தோப்புதான் 'ராக்கெட் ஏவுதளம்'. அங்கிருந்த சிறு தேவாலயம், விஞ்ஞானிகளின் அலுவலகம். பிஷப்பின் இல்லமே பட்டறை. மாட்டுக் கொட்டகைதான் ஆய்வகம். ராக்கெட் பாகங்களை விஞ்ஞானிகளே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சைக்கிளில் எடுத்துச் சென்றார்கள். 1981-ல் இந்தியாவின் முதல் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் 'ஆப்பிளை' உருவாக்கிய 'இஸ்ரோ' விஞ்ஞானிகள், அதை கொண்டு சென்றது ஒரு மாட்டுவண்டியில். இன்று இந்தியா விண்வெளி வல்லரசாய் வளர்ந்திருக்கிறது. அதில் பெண்களின் பங்கும் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது.

'செஸ்' இளஞ்சிங்கங்கள்... நிஜ நாயகன் நீரஜ் சோப்ரா

நிலவில் 'சந்திரயான்-3' விண்கலத்தின் 'பிரக்யான்' ரோவர் தடம் பதிப்பதை இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில், 'பிராக்' என்று செல்லமாக அழைக்கப்படும் பிரக்ஞானந்தா, உலகக் கோப்பை செஸ் போட்டியில் 'நம்பர் 1' வீரர் மாக்னஸ் கார்ல்ெசனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். 'டிரா... டிரா' என்று நகர்ந்துகொண்டிருந்த மோதலின் இறுதியில், பிரக்ஞானந்தாவுக்கு வெற்றி வசமாகும் என்று ஏராளமானவர்கள் நம்பினர். அதற்கு காரணம், அசைக்கமுடியாத சதுரங்க ராஜாவாக கருதப்படும் மாக்னஸ் கார்ல்ெசனை ஏற்கனவே 3 முறை 'பிராக்' புரட்டிப் போட்டிருப்பதுதான். கடைசியில் கார்ல்ெசன் அனுபவத்தின் உதவியால் வெற்றியை தனதாக்கிவிட்டாலும், உலகெங்கும் செஸ் ரசிகர்களின் மனங்களை வென்றார், பிரக்ஞானந்தா. உறுதுணையாக இருந்த அவரின் தாயார் நாகலட்சுமியும்தான். 18 வயது பிரக்ஞானந்தாவுக்கு, தெருவில் கிரிக்கெட் விளையாடும் பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம். ஆனால் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான முன்னேற்றத்தில், உலகின் 'நம்பர் 2' வீரர் ஹிகாரு நகமூரா, 'நம்பர் 3' வீரர் பேபியானோ கருனா என்று பெருந்தலைகளை சரசரவென்று சாய்த்துச் சென்றார். பிரக்ஞானந்தாவின் மனஉறுதியை மாக்னஸ் கார்ல்ெசனும் மனமார புகழ்ந்தார். 'பிராக்'கின் சக பள்ளி மாணவரான குகேஷும் உலக அரங்கை அதிரவைக்கும் இன்னொரு வீரர். உலகின் 'டாப்-10' வீரர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் குகேஷ், இந்தியாவின் 'நம்பர் 1' வீரராக, 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த இரு சென்னை செஸ் சிங்கங்களுடன், நிகால் சரீன், அர்ஜுன் எரிகைசி என்று இந்திய இளம் படை, உலகக் கோப்பையில் பார்வைகளைத் திருப்பியது. செஸ்சில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதையும் பறைசாற்றியது. பிரக்ஞானந்தாவின் 'வெள்ளி' மகிழ்ச்சி மறைவதற்குள், நிஜ நாயகன் நீரஜ் சோப்ரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முதல் 'தங்கத்தை' தட்டிவந்தார். அடுத்து இவர், பாரீஸ் ஒலிம்பிக்கில் பார்வையை பதித்திருக்கிறார். இந்த உலக நாயகர்கள், இந்தியாவில் இருந்து மேலும் சர்வதேச சாம்பியன்கள் உருவாவதற்கு உத்வேகம் தந்திருக்கிறார்கள்.

உயர உயர பறக்கும் இந்திய விமானத்துறை

உள்நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் பறக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. விமான பயணம் ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து அத்தியாவசியம் என்ற நிலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. தீபாவளி, பொங்கல், ஓணம் போன்ற பண்டிகைகளின்போது பஸ், ரெயில்களைப் போல உள்நாட்டு விமானங்களும் 'புல்' ஆகிவிடுகின்றன. கடந்த ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் உள்நாட்டில் சுமார் 7 கோடி பேர் விமானத்தில் பறந்திருக்கிறார்கள். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 43 சதவீத உயர்வு. அதேபோல சர்வதேச விமான பயணிகள் எண்ணிக்கையும் 2.30 கோடியில் இருந்து 3.50 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் உற்சாகம் அடைந்திருக்கிற இந்திய விமான நிறுவனங்கள், சாதனை அளவாக விமானங்கள் கொள்முதலுக்கு 'ஆர்டர்' கொடுத்துவருகின்றன. 'ஏர் இந்தியா', அமெரிக்காவின் 'போயிங்', பிரான்சின் 'ஏர்பஸ்' நிறுவனங்களிடம் இருந்து 470 விமானங்கள் வாங்க ஆணை வழங்கியுள்ளது. இதன் மதிப்பு ரூ.6.40 லட்சம் கோடி. மேலும் கூடுதலாக 370 விமானங்களை வாங்கவும் 'ஏர் இந்தியா' விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோல இன்னொரு இந்திய விமான நிறுவனமான 'இண்டிகோ', 'ஏர்பஸ்' நிறுவன வரலாற்றிலேயே ஒரே பெரிய 'சிங்கிள் ஆர்டராக' 500 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. 'ஏர்பஸ்'சில் இருந்து 'இண்டிகோ' வாங்கவுள்ள மொத்த விமானங்களின் எண்ணிக்கை 1,330! நாட்டில் புதிதாக பல நகரங்கள் 'உடான்' திட்டத்தில் வான்வழியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையங்களின் எண்ணிக்கையும் 74-ல் இருந்து 148 ஆக உயர்ந்துள்ளது. ஆக இந்திய விமானத்துறை 'ஜம்'மென்று 'டேக்ஆப்' ஆகியுள்ளது.

ஆளுகிறான் இந்தியன்

உள்நாட்டு இந்தியர்கள் மட்டுமின்றி, வெளிநாடுவாழ் இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் சர்வதேச அளவில் ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். முக்கிய பெரும் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். ஒரு பட்டியல் பார்க்கலாமா...

ரிஷி சுனக் - இங்கிலாந்து பிரதமர்

கமலா ஹாரிஸ் - அமெரிக்க துணை அதிபர்

தர்மன் சண்முகரத்னம் - சிங்கப்பூர் அதிபர்

முகமது இர்பான் அலி - கயானா ஜனாதிபதி

ஆன்டோனியோ கோஸ்டா - போர்ச்சுகல் பிரதமர்

சந்திரிகா பெர்சாத் 'சான்' சந்தோகி - சுரினாம் ஜனாதிபதி

பிரிதிவிராஜ்சிங் ரூபன் - மொரீசியஸ் ஜனாதிபதி

பிரவிந்த் ஜுக்நாத் - மொரீசியஸ் பிரதமர்

லியோ வரத்கார் - அயர்லாந்து பிரதமர்

கிறிஸ்டின் கங்காலூ-டிரினிடாடு டொபாகோ ஜனாதிபதி

வேவல் ராம்கலவான் - செசல்ஸ் ஜனாதிபதி

அஜய் பங்கா - உலக வங்கி தலைவர்

தலைமை செயல் அதிகாரிகள்...

அல்பபெட் (கூகுளின் துணை நிறுவனம்) - சுந்தர் பிச்சை

மைக்ரோசாப்ட் - சத்யா நாதெள்ளா

யூடியூப் - நீல் மோகன்

அடோப் - சாந்தனு நாராயண்

ஸ்டார்பக்ஸ் - லக்ஷ்மண் நரசிம்மன்

காக்னிசன்ட் - ரவிக்குமார்

மைக்ரான் டெக்னாலஜி - சஞ்சய் மெக்ரோத்ரா

சேனல் - லீனா நாயர்

ஐ.பி.எம். தலைவர் - அரவிந்த் கிருஷ்ணா

ஒளிரும் இந்தியாவுக்கு சில இருள் பக்கங்களும் உண்டு. இன்றும் தினமும் சுமார் 22 கோடி இந்தியர்கள் பசியுடன் உறங்கச் செல்கிறார்கள், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் உலகிலேயே 2-வது இடம், பெருநகரங்கள் மூச்சுத் திணற, கிராமங்கள் காலியாகும் நிலை, உலகின் முதல் 10 மாசுபட்ட நகரங்களில் 6 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.... இப்படி.

ஆனால் சவால்களை மனதில் வைத்து, சாதித்தவை குறித்து சந்தோஷப்பட்டு ஓடிக்கொண்டே இருப்போம். இது இந்தியாவின் நேரம்!

ஆயுதம் செய்வோம்

உலகிலேயே மிகப்பெரிய ஆயுத இறக்குமதி நாடாக இந்தியா இருந்தது, இருக்கிறது. ஆனால் இப்போது ஆயுத ஏற்றுமதியிலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த ஆண்டில் இந்தியா ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்திருப்பது ஒரு புதிய சாதனை. சர்வதேச ஆயுத சந்தை மதிப்புடன் ஒப்பிடுகையில் இது ஒரு சிறு துளி. ஆனால் ஆயுத ஏற்றுமதி என்பதே நமக்கு புதிய விஷயம். கடந்த 2016-17-ம் ஆண்டிலேயே இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி ரூ.1,521 கோடியாகத்தான் இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது தற்போதைய ஏற்றுமதி, 10 மடங்கு அதிகரிப்பு. அடுத்த ஆண்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஆயுத ஏற்றுமதிக்கு இந்தியா இலக்கு வைத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. உலகின் அதிவேக 'சூப்பர்சோனிக்' ஏவுகணையாக கருதப்படும் பிரமோஸ் முதல், தேஜாஸ் இலகுரக போர்விமானங்கள் வரை இந்தியாவின் பாதுகாப்புத் துறை தயாரிப்புகளை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வல்லமையை பறைசாற்றும்விதமாக கடலில் கம்பீரமாக மிதந்துகொண்டிருக்கிறது, விமானந்தாங்கி கப்பல் ஐ.என்.எஸ்.விக்ராந்த். இங்கிலாந்து, ரஷியாவிடம் இருந்து பழைய விமானந்தாங்கி கப்பல்களை வாங்கி புதுப்பெயரை சூட்டி பயன்படுத்திய நாம் தற்போது சுயமாக விமானந்தாங்கி கப்பலை கட்டும் நிலைக்கு வந்திருக்கிறோம். கடலுக்கு மேலே காவல் அரணாக ஐ.என்.எஸ். விக்ராந்த் விளங்குகிறது என்றால், கடல்நீருக்குள் இருந்தபடி எதிரிகளை கலங்கடிக்க காத்திருக்கிறது, முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். அரிகந்த். இதன் பொருளே, 'எதிரிகளை அழிப்பவர்' என்பதுதான். ராணுவ பலத்தில் உலகின் 4-வது பெரிய நாடாக கருதப்படும் இந்தியா, இப்போது தன்னிறைவில் மட்டுமல்ல, ஏற்றுமதியிலும் ஏறுமுகம் காட்டுகிறது.

ஆஸ்கார் அசத்தல்

வெளிநாடுகளைப் பொறுத்தவரை 'இந்திய சினிமா' என்றாலே 'இந்தி' சினிமாதான். ஆனால் தற்போது, பாலிவுட்டையும் தாண்டி, கோலிவுட் (தமிழ்), டோலிவுட் (தெலுங்கு), மோலிவுட் (மலையாளம்), சாண்டல்வுட் (கன்னடம்) என இந்தியாவில் இன்னபிற திரையுலகங்கள் இருப்பதையும், அவையும் தரமான படங்களை தருவதையும் உலகம் அறிந்துகொண்டிருக்கிறது, ஆரவாரமாய் கைதட்டி ரசித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு கிடைத்த ஆஸ்கார் அங்கீகாரமும் குறிப்பிடத்தக்கது. 'ஆர்ஆர்ஆர்' 'நாட்டு நாட்டு' பாடலுக்கு 'சிறந்த அசல் பாடலுக்கான' விருதும், 'எலிபன்ட் விஸ்பரரஸ்'-க்கு சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதும் கிடைத்தன. உலகிலேயே அதிக திரைப்படங்களை தயாரிக்கும் நாடாக உள்ள இந்தியா, மலை மலையாய் மசாலா படங்களை குவித்துவருகிறது. வசூலிலும் பிரமாண்டம் காட்டத் தொடங்கியிருக்கிறது. ஆனால் உலகத்தின் கவனம் இப்போது இந்தப் பக்கம் திரும்பியிருக்கும் நிலையில், சிறந்த படங்களை தருவதில் இந்திய சினிமா இனி மிகுந்த கவனம் செலுத்தும் என்று நம்பலாம்.

காஷ்மீரில் மாறி வீசும் காற்று

கடந்த சுதந்திர தினத்தின்போது காஷ்மீரில் காணப்பட்ட சில காட்சிகள், கடந்த பல ஆண்டுகளில் காண முடியாதவை. வழக்கமாக ஸ்ரீநகரில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய முக்கியத்துவ நாட்களில் ஒருவித இறுக்கமான அமைதி நிலவும். கடைகள் அடைத்திருக்க, மக்கள் வீடுகளுக்குள் முடங்குவார்கள். ஒன்றிரண்டு வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறும். ஆனால் ஸ்ரீநகரில் இந்த முறை சுதந்திர தின கொண்டாட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் கூறுகின்றன. பிரதான நிகழ்வு நடைபெற்ற பக்ஷி அரங்குக்கு வெளியே ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து உள்ளே சென்றார்கள். ஸ்ரீநகரின் மையப்பகுதியான லால் சவுக்கின் புகழ்பெற்ற மணிக்கூண்டு, மூவண்ண விளக்கொளியில் மிளிர்ந்தது. அதன் உச்சியில் தேசியக்கொடி பட்டொளி வீசி பறந்தது. காஷ்மீர் எங்கும் நடைபெற்ற 'திரங்கா யாத்திரை' என்ற தேசியக்கொடி ஊர்வலத்திலும் திரளானோர் பங்கேற்றனர். எந்த தத்துவத்தை கூறிக்கொண்டு வந்தாலும் பயங்கரவாதம் காயங்களையே தரும் என்று காஷ்மீரிகள் உணரத் தொடங்கியுள்ளனர். அதையே தற்போதைய காஷ்மீர் நிலை பிரதிபலிக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். 'பூலோக சொர்க்கம்' என்று அழைக்கப்படும் காஷ்மீரில், 1980 வாக்கில் பயங்கரவாத பிடி படர்வதற்கு முன் சுற்றுலாவாசிகள் குவிந்துவந்தனர். மீண்டும் அந்த நிலை வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 30 ஆண்டுகளிலேயே அதிகமாக, 26.7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு கடந்த ஆண்டு வருகை தந்தனர். இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களிலும் 18 ஆயிரம் வெளிநாட்டவர்கள் காஷ்மீரை ரசித்துச் சென்றிருக்கின்றனர். உலக அழகி கரோலினா பீலாவ்ஸ்காகூட சமீபத்தில் இங்கு வந்து தால் ஏரியில் படகில் மிதந்து சென்றார். இயற்கையின் அழகு கொட்டிக்கிடக்கும் காஷ்மீரில் மீண்டும் படப்பிடிப்புகளின் பரபரப்பு. கல்லெறி சம்பவங்கள் முற்றிலுமாக நின்றுவிட்ட நிலையில், உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாத பாதையில் நடப்பது வெகுவாக குறைந்திருக்கிறது. காஷ்மீரில் முழுமையான மாற்றம், மனமாற்றம் வர கொஞ்சம் காலம் ஆகலாம். ஆனால் பழைய இருண்ட நாட்கள் இனி திரும்பாது என்று மட்டும் அடித்து கூறலாம்.

உலகின் அன்னக்கூடை

1947-ல் ஆங்கிலேயர்கள் நம்மிடம் கையளித்துச் சென்றது, சொந்த குடிமக்களுக்கே சோறிட முடியாத தேசத்தை. அப்போது மக்கள்தொகை 34 கோடி. தற்போது அதைவிட 4 மடங்கு மக்கள்தொகை அதிகரித்துவிட்ட நிலையில், சொந்த மக்களுக்கு சோறிடுவது மட்டுமின்றி, உலகின் முக்கியமான உணவுப்பொருள் ஏற்றுமதியாளராகவும் உயர்ந்திருக்கிறது இந்தியா. குறிப்பாக சர்வதேச அரிசி ஏற்றுமதியில் நம் நாட்டின் பங்கு மட்டும் 40 சதவீதம். அதனால்தான், பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு விதித்த தடை உலக நாடுகளை உலுக்கிவிட்டது. சுமார் 140 நாடுகள், இந்தியாவில் இருந்து வரும் அரிசியை நம்பியிருக்கின்றன. உலகில் பாதி பேர் தினமும் சோற்றில் கைவைக்கும் நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி தடையால் 25 சதவீத அளவுக்கு சர்வதேச அளவில் அரிசி விலை உயர்ந்துவிட்டது. இதனால் பல ஆசிய, ஆப்பிரிக்க பஞ்ச தேசங்களின் நிலைதான் பரிதாபம். ஆனால், பருவமழை பாதிப்பு போன்றவற்றால் இந்திய அரசு முதலில் நாட்டு மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த அரிசி ஏற்றுமதி தடை காரணமாக பிற உணவுக்கு திரும்புவோரால் கோதுமை, சோயா, சோளம் போன்றவற்றின் விலையும் கூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. (உலகின் 2-வது பெரிய கோதுமை உற்பத்தியாளரான இந்தியா, கடந்த ஆண்டே அதன் ஏற்றுமதிக்கும் தடை விதித்துவிட்டது). நமக்கு அடுத்து அரிசி ஏற்றுமதி நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் ஆகியவையும் இந்தியாவைப் பின்பற்றி இறுக்கிப்பிடிக்கத் தொடங்கியிருப்பதால், உலக நிலவரம் கொஞ்சம் கலவரமாகத்தான் இருக்கிறது. தானியங்கள், சர்க்கரை, காய்கறி, இறைச்சி, கடல் உணவு ஏற்றுமதியிலும் பிரதான பங்கை வகிப்பதால், உலகின் 'அன்னக்கூடை'யான இந்தியாவுக்கு வருண பகவான் எப்போதும் கருணை புரிய வேண்டும். அப்போதுதான் உலக மக்கள் நிம்மதியாக பசியாற முடியும்.

பொங்கி பெருகும் பொருளாதாரம்

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் 'பிரிக்ஸ்' மாநாட்டின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'இந்தியா விரைவில் 5 லட்சம் கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.412 லட்சம் கோடி) பொருளாதார நாடாக மாறும்' என்றார். இது நிச்சயமாக வெறும் வாய்ச்சவடால் இல்லை என்று கூறலாம். தற்போது 3.38 டிரில்லியன் டாலர் பொருளாதார பலத்துடன் 5-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. 2014-ம் ஆண்டில்தான் நம் நாடு 10-வது இடத்தில் இருந்தது என்கிறபோது, இது சாதாரண சாதனையில்லை. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் கடந்த 10 ஆண்டுகளாக சராசரியாக 6.3 சதவீதமாக உள்ளது. இதே வேகத்தில் சென்றால், வரும் 2027-ம் ஆண்டில் ஜெர்மனி (4 டிரில்லியன்), ஜப்பானை (4.2 டிரில்லியன்) தாண்டி உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இது நிச்சயம் சாத்தியம் என்கிறார், பாரத ஸ்டேட் வங்கியின் குழும தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் சவும்யா காந்தி கோஷ். இந்த நிலையை இந்தியா 2029-ம் ஆண்டு எட்டும் என்று முன்பு கணிக்கப்பட்டதற்கு மாறாக, 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் நாடு சாதிக்கும் என்று சத்தியம் செய்கிறார் இவர். ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் வெளியிட்டுள்ள பட்டியல்படி, கடந்த 2005-2021 காலகட்டத்தில் இந்தியா சுமார் 41 கோடியே 50 லட்சம் பேரை வறுமையில் இருந்து வெளியேற்றியுள்ளது. இருந்தபோதும், தனிநபர் அடிப்படையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாம் வங்காளதேசம் போன்ற நாடுகளையும்விட பின்தங்கி உள்ளோம் என்பது போன்ற சங்கடங்கள் இருக்கின்றன. ஆனால் நாடு வளமடையும்போதும் அதன் நன்மைகள் குடிமக்களுக்கும் கசியும் என்று நம்பலாம்.

வைரத் துளிகள்

* இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் சாதனை வெற்றி அனைவரும் அறிந்தது. தற்போது 'யூனிகார்ன்'களின் (100 கோடி டாலர் மதிப்பு புத்தாக்க நிறுவனங்கள்) எண்ணிக்கையிலும் உலகின் 'டாப்-5' நாடுகளில் ஒன்றாக இந்தியா ஆகியிருக்கிறது.

* உலகின் வைரத்தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் திகழ்கிறது. அதன் புதிய மகுடமாக, அமெரிக்காவின் பென்டகனை பின்னுக்குத் தள்ளிய வைரத் தொழில் மைய கட்டிடம் அமைந்திருக்கிறது.

* ஆக்கியில் ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா மீண்டும் அந்த பொற்காலத்துக்கு திரும்புவது போல தெரிகிறது. உலகின் 'டாப்-3' அணியாக ஆகியிருக்கிறது.

* இந்தியாவில் புலிகளை காப்பதற்கான 'புராஜெக்ட் டைகர்' திட்டம், உலக அளவில் பாராட்டு பெற்றிருக்கிறது. 1973-ம் ஆண்டு இத்திட்டத்தை தொடங்கிபோது நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 268 ஆக சுருங்கியிருந்தது. தற்போது இந்த திட்டத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடும் நிலையில் 3,925 ஆக பெருகியிருக்கிறது.

* உலகிலேயே உயரமான ரெயில்வே பாலம் (செனாப்-காஷ்மீர்), உயரமான சிலை (வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை-குஜராத்), பெரிய கிரிக்கெட் மைதானம் (நரேந்திர மோடி மைதானம்-ஆமதாபாத்) போன்ற பொறியியல் பிரமாண்டங்களையும் இந்தியா படைத்திருக்கிறது.


Next Story