குதிரையை துன்புறுத்தியதால் ஒலிம்பிக் வாய்ப்பை இழந்த வீராங்கனை
குதிரையை துன்புறுத்தியதால் இங்கிலாந்து வீராங்கனை ஒலிம்பிக் வாய்ப்பை இழந்துள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து குதிரையேற்ற பந்தய வீராங்கனை 39 வயதான சார்லோட் துஜார்டின் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். ஒலிம்பிக்கில் இதுவரை 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கம் வென்றுள்ள அவர் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்த எண்ணிக்கையை 7-ஆக உயர்த்தி அதிக ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இங்கிலாந்து வீராங்கனை என்ற சாதனையை படைக்கும் முனைப்புடன் ஆயத்தமாகி வந்தார்.
இந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் இங்கிலாந்து அணியில் இருந்து விலகியுள்ளார். 4 ஆண்டுக்கு முன்பு குதிரைக்கு பயிற்சி அளித்த போது, அந்த குதிரையின் காலில் பலமுறை சாட்டையால் அடித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோதான் அவரது ஒலிம்பிக் சாதனை கனவுக்கு தடையாக மாறியுள்ளது. விலங்கின் நலனுக்கு எதிரான குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அவரை இடைநீக்கம் செய்துள்ள சர்வதேச குதிரையேற்ற விளையாட்டு சம்மேளனம் இது குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.