பாரீசில் இன்று தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டி: படகில் நடக்கும் வீரர்கள் அணிவகுப்பு


பாரீசில் இன்று தொடங்குகிறது ஒலிம்பிக் போட்டி: படகில் நடக்கும் வீரர்கள் அணிவகுப்பு
x

206 நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி பாரீசில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

பாரீஸ்,

உலகின் அனைத்து நாடுகளையும் ஓரணியில் இணைக்கும் ஈடில்லா சக்தி ஒலிம்பிக் போட்டிக்கு மட்டுமே உண்டு. பண்டைய கிரேக்க நாட்டில் மதசடங்கு மற்றும் கடவுளின் புகழை பரப்பும் ஒரு விழாவாக உருவான ஒலிம்பிக் போட்டி, ரோமானியர்களின் படையெடுப்புகளால் நசுங்கிப் போனது. அதன் பிறகு பல நூற்றாண்டுகளை கடந்து நவீன ஒலிம்பிக்காக 1896-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அது தான் அதிகாரபூர்வ முதலாவது ஒலிம்பிக்காகும்.

அதன் பிறகு ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. உலக போர் காரணமாக 3 முறை ரத்தானது. கடைசியாக 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி அரங்கேறியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் 33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பந்தயங்கள் நடக்கின்றன. 'பிரேக்கிங்' என்ற போட்டி இந்த ஒலிம்பிக்கில் அறிமுகம் ஆகிறது. நடனம் மற்றும் சாகச அசைவுகளை உள்ளடக்கிய 'பிரேக்கிங்' போட்டியில் இரண்டு தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தொடக்க விழாவை மைதானத்தில் இல்லாமல், பாரீசின் புகழ்பெற்ற சென் நதி கரையில் நடத்துகிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதையொட்டி அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க விழாவின் சிறப்பு அம்சமே வீரர், வீராங்கனைகளின் கம்பீர அணிவகுப்பு தான். அணிவகுப்பு அலங்கரிக்கப்பட்ட படகில் நடத்தப்படுகிறது. இதற்காக ஏறக்குறைய 94 படகுகள் தயார் நிலையில் உள்ளன.

வீரர்கள் தங்களது பாரம்பரிய உடையில் தேசிய கொடியுடன் படகில் அணிவகுத்து நிற்பார்கள். முதல் நாடாக ஒலிம்பிக்கின் தாயகமான கிரீஸ் அணிவகுப்பை தொடங்கும். கடைசி நாடாக போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணியினர் உற்சாகமாக வலம் வருவார்கள். அகர வரிசைப்படி அணிவகுப்பில் இந்தியாவுக்கு 84-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

சரத்கமல், பி.வி.சிந்து

நமது அணிக்கு டேபிள் டென்னிஸ் வீரர் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இருவரும் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள். இந்திய வீராங்கனைகள் சேலை உடுத்தி செல்ல இருப்பது கூடுதல் சிறப்பாகும். படகு அணிவகுப்பு சென் நதியில் ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி 6 கிலோமீட்டர் தூரம் சென்று பான்ட் டி லெனா பாலத்தில் நிறைவடைகிறது.

வழியில் பிரான்சின் முக்கியமான அடையாளங்கள், போட்டிக்குரிய ஸ்டேடியங்களை வீரர், வீராங்கனைகள் பார்த்து ரசித்து செல்வார்கள். ஆற்றின் இரு புறமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களின் ஆரவாரமும், ஆர்ப்பரிப்பும் இதுவரை இல்லாத ஒரு அனுபவத்தை கொடுக்கப்போகிறது. அத்துடன் நகர் முழுவதும் 80 மெகா திரையில் தொடக்க விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

இறுதியில் உலக அதிசயமான ஈபிள் கோபுரத்தின் எதிரில் உள்ள டிரோகேட்ரோ பகுதியில் கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுகிறது. 3 மணி நேரத்துக்கு மேலாக நடத்தப்படும் வண்ணமயமான தொடக்க விழாவில், 3 ஆயிரம் கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். இசைவெள்ளத்துக்கு மத்தியில் நடனம், லேசர் மற்றும் டிரோன்ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கை என்று பிரமிப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது. இதில் பிரான்சின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறும்.

போட்டியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறார். தொடர் ஓட்டமாக எடுத்து வரப்படும் தீபம் மெகா கொப்பரையில் ஏற்றப்பட்டதும் ஒலிம்பிக் கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி விடும். தீபத்தை ஏற்றி வைக்கும் அரிய கவுரவம் யாருக்கு வழங்கப்படுகிறது என்பதை பிரான்ஸ் ரகசியமாக வைத்துள்ளது. அது கடைசி நிமிடத்தில் தான் தெரிய வரும்.

இந்திய அணியில் 117 பேர்

தொடக்க விழாவை காண அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் பல நாட்டு முக்கிய பிரமுகர்கள் குவிவதால் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 75 ஆயிரம் போலீசார், ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சோதனையில் ஈடுபட பல்வேறு நாட்டில் இருந்து மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

முதல் நாளில் எந்த விளையாட்டும் கிடையாது. மறுநாளில் இருந்து போட்டிகள் தொடங்கும். இந்த ஒலிம்பிக் திருவிழாவில், இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், வில்வித்தை, ஆக்கி உள்பட 16 விளையாட்டுகளில் 117 வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள். கடந்த ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்ற இந்தியா இந்த முறை அதை விட கூடுதலாக பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story