2-வது டி20: சால்ட், புரூக் அதிரடி.. நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

image courtesy:twitter/@englandcricket
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பில் சால்ட் 85 ரன்கள் அடித்தார்.
கிறைஸ்ட்சர்ச்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 போட்டி நடைபெறுகிறது. அதன்படி கிறைஸ்ட்சர்ச்சில் கடந்த 18-ந்தேதி நடந்த முதலாவது டி20 போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.
இதனையடுத்து நியூசிலாந்து-இங்கிலாந்து இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சான்ட்னெர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டு இழப்புக்கு 236 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 85 ரன்களும், ஹாரி புரூக் 78 ரன்களும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அதனை தொடர்ந்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணி 18 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் செபெர்ட் 39 ரன்னும், கேப்டன் சான்ட்னெர் 36 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட்டுகளும், லுக் வுட், பைடன் கார்ஸ், லியாம் டாவ்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 23-ம் தேதி (வியாழக்கிழமை) ஆக்லாந்தில் நடக்க உள்ளது.






