2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

image courtesy:BCCI
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் கேப்டன் சுப்மன் கில்லின் இரட்டை சதத்தின் (269 ரன்) உதவியுடன் 587 ரன்கள் குவித்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. ஜேமி சுமித் (184 ரன்), ஹாரி புரூக் (158 ரன்) சதம் அடித்தனர்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 83 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 427 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரவீந்திர ஜடேஜா 69 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில் 161 ரன்னில் அவுட்டானார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 72 ரன்கள் அடித்திருந்தது. ஆலி போப் 24 ரன்னுடனும், ஹாரி புரூக் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. போப் 24 ரன்களிலும், புரூக் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் ஆகாஷ் தீப் காலி செய்தார். இந்த நெருக்கடிக்கு மத்தியில் கைகோர்த்த பென் ஸ்டோக்ஸ் - ஜேமி சுமித் கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறிது நேரம் நிலைத்து விளையாடிய இந்த ஜோடி உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் பிரிந்தது. ஸ்டோக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் 32 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 7 ரன்னில் அவுட்டானார். அடுத்து பிரைடன் கார்ஸ் களமிறங்கினார்.
கிறிஸ் வோக்சின் ஒத்துழைப்புடன் அரைசதத்தை கடந்த ஜேமி சுமித் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினார். இருப்பினும் அவரின் விக்கெட்டையும் ஆகாஷ் தீப் கைப்பற்றினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேமி சுமித் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். இது ஆகாஷ் தீப்பின் 5-வது விக்கெட்டாக பதிவானது.
இதனையடுத்து கைகோர்த்த ஜோஷ் டாங் - பிரைடன் கார்ஸ் கூட்டணி டிரா செய்யும் நோக்கில் விளையாடியது. இந்திய பந்துவீச்சை சமாளித்து விளையாடிய இந்த ஜோடி நிறைய பந்துகளை வீணடித்தது. ஒரு வழியாக இந்த கூட்டணியை ஜடேஜா உடைத்தார். அவரது பந்துவீச்சில் ஜோஷ் டாங் 2 ரன்களில் (29 பந்துகள்) ஆட்டமிழந்தார். அடுத்து ஷோயப் பஷீர் களமிறங்கினார். அவரும் இந்திய பவுலர்களுக்கு தண்ணி காட்டினார். இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் சவால் அளித்து வந்த பிரைடன் கார்சின் விக்கெட்டை ஆகாஷ் தீப் கைப்பற்றினார்.
முடிவில் 2-வது இன்னிங்சில் 68.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 271 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 10-ம் தேதி தொடங்க உள்ளது.