3-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து

image courtesy:ICC
தொடர் நாயகனாக ஜேக்கப் டபி தேர்வு செய்யப்பட்டார்.
மவுன்ட் மாங்கானு,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் முதல் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் 2-வது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 381 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்களில் ஆட்டமிழந்தது. கவெம் ஹாட்ஜ் 123 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
அடுத்து 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் பேட் செய்த நியூசிலாந்து அணி 54 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கேன் வில்லியம்சன் 40 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 46 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். லதாம் (101 ரன்), கான்வே (100 ரன்) சதமடித்து அசத்தினர். முதல் இன்னிங்சில் லதாம் சதமும் (137 ரன்) கான்வே இரட்டை சதமும் அடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 462 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் முடிவில் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ரன் அடித்திருந்தது. பிரன்டன் கிங் (37 ரன்), ஜான் கேம்ப்பெல் (2 ரன்) களத்தில் இருந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 419 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிரண்டன் கிங் (67 ரன்) தவிர மற்ற வீரர்கள் சொதப்பினர். 80.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 138 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டலி 5 விக்கெட்டுகளும், அஜாஸ் படேல் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். கான்வே ஆட்ட நாயகனாகவும், ஜேக்கப் டபி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.






