பரபரப்பான சூழலில் 4-வது டெஸ்ட்... கடைசி நாளில் பந்து வீசுவாரா பென் ஸ்டோக்ஸ் .. ? இங்கிலாந்து பயிற்சியாளர் பதில்

இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
மான்செஸ்டர்,
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 544 ரன்கள் எடுத்திருந்தது. மறுநாள் தொடர்ந்து ஆடிய அந்த அணி முதல் இன்னிங்சில் 157.1 ஓவர்களில் 669 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதமடித்து அசத்தினர். இந்திய தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே பேரிடி விழுந்தது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ஜெய்ஸ்வால் (0) ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட்டிடம் கேட்ச் ஆனார். அடுத்து இறங்கிய தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் (0) சந்தித்த முதல் பந்திலேயே இதே போல் விக்கெட்டை தாரைவார்த்தார். ரன் கணக்கை தொடங்கும் முன்பே இரு விக்கெட்டுகள் காலியானதால் இந்தியா அதிர்ச்சிக்குள்ளானது.
இந்த நெருக்கடியான சூழலில் 3-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலும், கேப்டன் சுப்மன் கில்லும் இணைந்தனர். பொறுமையை கடைபிடித்த இவர்கள் முழுமையாக தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 78 ரன்களுடனும், கே.எல். ராகுல் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இந்திய அணி இன்னும் 137 ரன்கள் அடிக்க வேண்டும். இந்த பரபரப்பான சூழலில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
முன்னதாக இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய பென் ஸ்டோக்ஸ், 2-வது இன்னிங்சில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. பேட்டிங் செய்தபோது தசைப்பிடிப்பு காரணமாக பாதியில் வெளியேறி பின்னர் மீண்டும் வந்து சதமடித்து அசத்தினார். இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் அவர் பந்துவீசுவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக இங்கிலாந்து துணை பயிற்சியாளர் மார்கஸ் டிரெஸ்கோதிக் சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "கடந்த சில வாரங்களாக அவருக்கு அதிக பணிச்சுமை இருந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் நீண்ட நேரம் பேட்டிங் செய்ததால் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இரவு ஓய்வுக்கு பின் இன்று மீண்டும் பந்துவீசுவார் என நம்புகிறேன்" என்று கூறினார்.






