தொடர்ந்து 5 சதம்: தமிழக வீரரின் சாதனையை சமன் செய்த துருவ் ஷோரே

‘பிளேட்’ பிரிவில் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன.
சென்னை,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பிளேட்’ பிரிவில் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் ராஜ்கோட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் (பி பிரிவு) விதர்பா அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாகவ விளையாடிய விதர்பா வீரர் துருவ் ஷோரே சதம் (109 ரன்) அடித்தார். பெங்காலுக்கு எதிரான தொடக்க ஆட்டத்திலும் சதம் (136 ரன்) கண்டிருந்தார். அத்துடன் முந்தைய சீசனில் கடைசி 3 ஆட்டங்களில் 100 ரன்களை கடந்திருந்தார்.
இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் (சர்வதேச ஒரு நாள் மற்றும் உள்ளூர் ஒரு நாள் போட்டிகளை சேர்த்து) தொடர்ச்சியாக 5 சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை தமிழகத்தின் ஜெகதீசனுடன் (2022-23-ம் ஆண்டு விஜய் ஹசாரேயில் தொடர்ந்து 5 சதம்) பகிர்ந்துள்ளார்.






