அஸ்வின் ஓய்வுக்கு பின் எனக்கு அதிக ஓவர்கள் வீசும் வாய்ப்பு கிடைக்கிறது - ஜடேஜா


அஸ்வின் ஓய்வுக்கு பின் எனக்கு அதிக ஓவர்கள் வீசும் வாய்ப்பு கிடைக்கிறது - ஜடேஜா
x

Image Courtesy: @BCCI

தினத்தந்தி 14 Oct 2025 8:45 PM IST (Updated: 14 Oct 2025 8:45 PM IST)
t-max-icont-min-icon

வெஸ்ட் இண்டீக்கு எதிரான தொடரின் தொடர் நாயகன் விருது ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது.

புதுடெல்லி,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி புதுடெல்லியில் நடந்தது. அந்த போட்டி இன்று முடிந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.

இந்த தொடரின் தொடர் நாயகன் விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து ஜடேஜா அளித்த பேட்டியில் கூறியதாவது, அஸ்வின் ஓய்வுக்கு பின் எனக்கு அதிக ஓவர்கள் வீசும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக எங்களுடைய அணி பேட்டிங், பந்து வீச்சில் அருமையாக செயல்பட்டனர். கடந்த 5 - 6 மாதங்களாக கிரிக்கெட்டின் எம்மாதிரியான பிராண்டை விளையாடுகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்.

எனவே இது அணியாக எங்களுக்கு நல்ல அறிகுறி. இதை நாங்கள் நீண்டகாலம் தொடர விரும்புகிறோம். நான் 6வது இடத்தில் பேட்டிங் செய்வேன் என்று கவுதம் பாய் சொன்னார். அதனால் இப்போது நான் முறையான பேட்ஸ்மேன் போல சிந்திப்பது எனக்கு வேலை செய்கிறது. கடந்த பல வருடங்களாக நான் 8, 9வது இடங்களில் மட்டுமே பேட்டிங் செய்தேன். எனவே தற்போதைய மனநிலை எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

இப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் போது நான் களத்தில் நிறைய நேரம் செலவிட முயற்சி செய்கிறேன். நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் நான் சாதனைகளைப் பற்றி சிந்திப்பதில்லை. பேட்டிங், பந்து வீச்சில் கவனம் செலுத்தி என்னுடைய அணியை வெற்றி பெற முயற்சிக்கிறேன்.

ஒருவேளை அதை சிறப்பாக செய்யாவிட்டால் ஒரு வீரராக என்னுடைய மதிப்பு பிரதிபலிக்காது. எனவே எப்போதும் 100 சதவீத பங்களிப்பை கொடுக்க விரும்புகிறேன். இது என்னுடைய 3வது தொடர்நாயகன் விருது என்பதால் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு எடுத்துச் செல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story