ஆசிய கோப்பை: நானாக இருந்தால் சாம்சனுக்கு பதில் அந்த 14-வயது வீரரை தேர்ந்தெடுப்பேன் - ஸ்ரீகாந்த்


ஆசிய கோப்பை: நானாக இருந்தால் சாம்சனுக்கு பதில் அந்த 14-வயது வீரரை தேர்ந்தெடுப்பேன் - ஸ்ரீகாந்த்
x

ஆசிய கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது.

சென்னை,

நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வங்காளதேசம் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி நாளை (19-ம் தேதி) அறிவிக்கப்பட உள்ளது. தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் கலந்தாலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர்.

இந்த அணியில் யார்-யாரெல்லாம் இடம்பெற போகிறார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு தகவல்களும் வெளிவந்த வண்னம் உள்ளன.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பையில் கடந்த ஐ.பி.எல். தொடரில் அசத்திய 14 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி விளையாட வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். குறிப்பாக சஞ்சு சாம்சனுக்கு பதிலாக சூர்யவன்சியை தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், “நீங்கள் தைரியமாக விளையாட வேண்டும். வைபவ் சூர்யவன்ஷியை காத்திருக்க வைக்காதீர்கள். வைபவ் முதிர்ச்சியடையட்டும் என்று சொல்லாதீர்கள். ஏனெனில் அவர் ஏற்கனவே குறிப்பிடத்தக்க முதிர்ச்சி தன்மையுடன் விளையாடுகிறார். அவருடைய ஷாட் தேர்வு சிறப்பாக இருக்கிறது. ஒருவேளை நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் அவரை 15 பேர் கொண்ட அணியில் தேர்ந்தெடுப்பேன்.

என்னைப் பொறுத்த வரை சாம்சன் விளையாடுவது சந்தேகமாகும். அபிஷேக் ஷர்மா என்னுடைய முதல் தொடக்க ஆட்டக்காரர் என்பதில் சந்தேகமில்லை. நான் இன்னும் 2 தொடக்க வீரர்களை தேர்ந்தெடுப்பேன். அது சூர்யவன்ஷி அல்லது சாய் சுதர்சனாக இருக்கலாம். சுப்மன் கில் பேக்-அப் வீரராக இருப்பார். ஒருவேளை நான் தேர்வாளராக இருந்தால் சூர்யவன்ஷியை டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியிலும் எடுப்பேன்” என்று கூறினார்.

1 More update

Next Story