ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு 137 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

image courtesy:twitter/@ACCMedia1
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 45 ரன்கள் அடித்தார்.
தோகா,
வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை டி20 போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் ஜிதேஷ் சர்மா தலைமையில் களமிறங்கியுள்ள இந்தியா தனது முதல் ஆட்டத்தில் யுஏஇ அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது. இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இன்று விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா - வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் ஆர்யா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நமன் திர் களமிறங்கினார்.
பாகிஸ்தான் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட சூர்யவன்ஷி - நமன் திர் ஜோடி இந்திய அணிக்கு வலு சேர்த்தது. இதில் நமன் திர் 35 ரன்களிலும், சூர்யவன்ஷி 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அவுட்டானதும் இந்திய அணி தடுமாற்றத்திற்குள்ளானது.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் ஜிதேஷ் சர்மா 5 ரன்களிலும், நேஹல் வதேரா 8 ரன்களிலும், அசுதோஷ் சர்மா டக் அவுட் ஆகியும், ரமந்தீப் சிங் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இறுதி கட்டத்தில் ஹர்ஷ் துபே (19 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி கவுரமான நிலையை எட்டியது.
19 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி 136 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஷாகித் அசிஸ் 3 விக்கெட்டுகளும், மாஸ் சதகத் மற்றும் சாத் மசூத் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 137 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்க உள்ளது.






