ஆசிய கோப்பை: துபாய் சென்ற இந்திய வீரர்கள்


ஆசிய கோப்பை: துபாய் சென்ற இந்திய வீரர்கள்
x

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை (இரவு 8 மணி) சந்திக்கிறது

துபாய்,

நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை (இரவு 8 மணி) சந்திக்கிறது. பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் மோதல் 14-ந்தேதி அரங்கேறுகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் பங்கேற்கிறது. இதையொட்டி வீரர்கள் அனைவரும் 4-ந்தேதி (நேற்று) மாலைக்குள் துபாய் சென்று விட வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி இருந்தது. இதன்படி இந்திய வீரர்கள் தனித்தனி குழுவாக நேற்று துபாய் புறப்பட்டனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்றனர். அவர்கள் இன்று பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

1 More update

Next Story