ஆசிய கோப்பை: யுஏஇ-க்கு எதிரான வெற்றி.. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன..?


ஆசிய கோப்பை: யுஏஇ-க்கு எதிரான வெற்றி.. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன..?
x

image courtesy:BCCI

ஆசிய கோப்பையில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் யுஏஇ அணியை எளிதில் வீழ்த்தி வெற்றியோடு தொடங்கி உள்ளது.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 2-வது லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய யுஏஇ அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. வெறும் 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த யுஏஇ அணி 57 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அலிஷன் ஷரபு 22 ரன்கள் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர்களை தவிர யாரும் 5 ரன்களை கூட தாண்டவில்லை. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 30 ரன்னில் கேட்ச் ஆனார். சுப்மன் கில் 20 ரன்களுடனும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்திய அணி அடுத்த லீக்கில் 14-ந்தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், “மைதானத்தின் தன்மையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தோம். அது 2-வது இன்னிங்சிலும் அப்படியே இருந்தது. எங்கள் வீரர்களிடமிருந்து தெளிவான செயல்பாடுகள் வந்தன. சமீபத்தில் பல வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்காக இங்கு இருந்தனர். மைதானம் நன்றாக இருந்தாலும், அது சற்று மெதுவாக இருந்தது. இங்கு இப்போது மிகவும் வெப்பமாக உள்ளது.

குல்தீப் நன்றாக செயல்பட்டார், ஹர்திக், துபே மற்றும் பும்ராவிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. அபிஷேக் சர்மா உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இலக்கு 200 அல்லது 50 உட்பட எதுவாக இருந்தாலும் அவர் அணியை முன்னிறுத்தி விளையாடுவது நம்ப முடியாதது. அனைவரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு உற்சாகமாக உள்ளனர்” என்று கூறினார்.

1 More update

Next Story