ஆசிய கோப்பை: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா..? யுஏஇ அணியுடன் இன்று மோதல்


ஆசிய கோப்பை: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா..? யுஏஇ அணியுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 10 Sept 2025 6:14 AM IST (Updated: 10 Sept 2025 6:17 AM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை கிரிக்கெட் நேற்று தொடங்கியது.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விரு அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 4 முறை (ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி) சந்தித்துள்ளது. அனைத்திலும் இந்திய அணியே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ்1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

1 More update

Next Story