பி.சி.சி.ஐ.-க்கு பயந்து ரோகித், ஜெய்ஸ்வால் ரஞ்சி கோப்பையில் விளையாடினார்களா..? கவாஸ்கர் விமர்சனம்


பி.சி.சி.ஐ.-க்கு பயந்து ரோகித், ஜெய்ஸ்வால் ரஞ்சி கோப்பையில் விளையாடினார்களா..? கவாஸ்கர் விமர்சனம்
x
தினத்தந்தி 29 Jan 2025 1:38 AM IST (Updated: 29 Jan 2025 4:19 AM IST)
t-max-icont-min-icon

ரோகித் சர்மா ரஞ்சி கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மும்பை,

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. தோல்வி எதிரொலியாக ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து நல்ல நிலையில் இருப்பதற்கு உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து உடல் தகுதி பிரச்சினை இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது.

இதனையடுத்து ரஞ்சி கோப்பையில் மும்பை அணி தரப்பில் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் விளையாடினர். ஜம்மு - காஷ்மீர் அணிக்கு எதிரான மும்பையின் ஆட்டத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா (3, 28 ரன்), ஜெய்ஸ்வால் (4, 26) குறைவான ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதனால் மும்பை அணி அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் சுமாராக விளையாடிய ரோகித் சர்மா ரஞ்சி கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் ரஞ்சி கோப்பையில் கட்டாயம் விளையாட வேண்டும் என்ற பி.சி.சி.சி.-யின் விதிமுறைக்கு பயந்து விளையாடினார்களா? என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியது பின்வருமாறு:- "மும்பை டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் இப்போதெல்லாம் நிதானமாக விளையாடாமல் அதிரடியாக விளையாடி ஆல் அவுட்டாகும் ஆட்டத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. பிளாட்டான பிட்ச்களில் அது வேலை செய்யும். ஆனால் பவுலிங் செய்வதற்கு கொஞ்சம் சாதகமான ஆடுகளங்களில் நீங்கள் அசத்துவதற்கு டெக்னிக் வேண்டும். கடந்த சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிடம் இதே போன்ற ஆட்டத்தை நாம் பார்த்தோம்.

அங்கே கொஞ்சம் நங்கூரமாக விளையாடி 50 ரன்கள் குவித்திருந்தால் தொடரின் முடிவே வேறு மாதிரி அமைந்திருக்கலாம். அவர்கள் (ரோகித், ஜெய்ஸ்வால்) ரஞ்சி கோப்பையில் இதயத்தில் இருந்து விளையாடினார்களா அல்லது ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் பி.சி.சி.ஐ. ஒப்பந்தத்திலிருந்து ஸ்ரேயாஸ், இஷான் கிஷன் நீக்கப்பட்டது போன்ற முடிவை தவிர்க்க வேண்டும் என்பதற்காக விளையாடினார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்" என்று கூறினார்.

1 More update

Next Story