'டிரா' விவகாரம்: பென் ஸ்டோக்சை சரமாரியாக விளாசிய இந்திய முன்னாள் வீரர்

image courtesy:PTI
4-வது டெஸ்டில் ஜடேஜா மற்றும் சுந்தர் சதத்தை நெருங்கிய வேளையில் ஸ்டோக்ஸ் டிரா செய்யுமாறு கேட்டது பேசு பொருளாகியுள்ளது.
மான்செஸ்டர்,
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் (150 ரன்), கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (141 ரன்) சதம் அடித்தனர்.
311 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் எடுத்து 114 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் 101 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 107 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சுப்மன் கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முன்னதாக இந்த போட்டி டிராவில் முடிவதற்கு 5 ஓவருக்கு முன்பாக இங்கிலாந்து வீரர்கள் ஆட்டத்தை டிராவில் முடிக்க முன்வந்தனர். ஆனால் இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்கும் வாய்ப்புக்காக டிராவை தள்ளி போட்டனர். இதனால் இரு அணியினருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜடேஜாவிடம் ஹாரி புரூக் பந்துவீச்சில் நீங்கள் சதம் அடிக்க விரும்புகிறீர்களா? என்று கிண்டல் செய்யும் விதத்தில் கேட்டார். இந்த விவகாரம் பலரது மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
இந்நிலையில் பென் ஸ்டோக்சின் இந்த செயலை இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சரமாரியாக விளாசியுள்ளார்.
இது குறித்து அஸ்வின் பேசுகையில், "இது என்ன இரட்டை வேடம்? உங்களுக்கு ஜெயிக்க முடியவில்லை என்ற விரக்தியில் இருக்கிறீர்கள். அதற்காக நீங்கள் உங்கள் வீரர்களுடன் சண்டையிடலாம், பந்தை குத்தலாம் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அதற்காக எங்கள் வீரர்கள் ஏன் சதம் அடிக்கக் கூடாது? என்று நினைக்கிறீர்கள். 'நான் விரக்தியில் இருக்கிறேன், அதனால் நீயும் சந்தோஷமாக இருக்கக் கூடாது, நீயும் அழுதுகொண்டே போ' என்று சொல்வது போல் இருக்கிறது இது. இது எப்படி நியாயம்?. காலை முதல் கடினமாக விளையாடி வரும் வீரர், சதம் அடிக்கும் வாய்ப்பை ஏன் விட வேண்டும்?.
உங்களது அனைத்து பந்து வீச்சாளர்களையும் அவர்கள் விளையாடினர். சாதாரண பந்துவீச்சாளருக்கு எதிராக சதம் அடிப்பது ஒரு பெரிய விஷயமா?' என்று கேட்கிறார்கள். பந்து வீசுவது உங்கள் அணியினர். யார் பந்து வீசினாலும், சதம் அடிப்பது ஒரு வீரரின் உழைப்பு. அதை ஏன் தடுக்க வேண்டும்? முக்கிய பவுலர்களை பந்து வீச வைக்காமல் மற்றவர்களை வீசவைத்து விட்டு அவர்கள் பந்தில் செஞ்சுரி அடிக்க வேண்டுமா? என பென் ஸ்டோக்ஸ் கேட்கிறார். அது எங்கள் பிரச்சினை அல்ல. நீங்கள் ஸ்டீவ் ஹார்மிசனை அழைத்து வாருங்கள், பிளின்டாப்பை அழைத்து வாருங்கள்! அவர்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்" என கூறினார்.






