இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர்: சச்சின் கோரிக்கை.. பட்டோடி பெயரிலேயே கோப்பை வழங்க முடிவு

image courtesy:PTI
இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு புதிய பெயரில் கோப்பை வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ம் தேதி தொடங்க உள்ளது. 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு உட்பட்ட தொடர் இது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை புதிய பெயரில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக 2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு மறைந்த இந்திய முன்னாள் கேப்டனான 'பட்டோடி' பெயரில் கோப்பை வழங்கப்பட்டு வந்தது.
இதனை மாற்ற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதற்கு பி.சி.சி.ஐ.-யும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி இனி வரும் இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் தொடருக்கு அந்த பெயர் மாற்றப்பட்டு 'தெண்டுல்கர்- ஆண்டர்சன்' என்ற பெயரில் கோப்பை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட ஜாம்பவான் வீரர்களான சச்சின் தெண்டுல்கர் (இந்தியா) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சனை (இங்கிலாந்து) கவுரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இருப்பினும் இது சச்சின் தெண்டுல்கருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. உடனடியாக பி.சி.சி.ஐ. மற்றும் இங்கிலாந்து வாரிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசிய அவர் பட்டோடி பெயரில் கோப்பையை வழங்க வேண்டும். அதுதான் சிறப்பாக இருக்கும் என வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்று இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு பட்டோடி பெயரிலேயே கோப்பை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த விவகாராத்தில் ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷாவும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.






