எல்லோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள்: சூர்யகுமார் யாதவ் பாராட்டு

இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
பிரிஸ்பேன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் (முதல் போட்டி மழையால் ரத்து) தொடரில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று
நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் அடித்திருந்தபோது மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அபிஷேக் சர்மா 23 ரன்களுடனும், கில் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மழை நின்று, போட்டி மீண்டும் தொடங்கும் என ரசிகர்கள் மைதானத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக போட்டி ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் போட்டியில் மழையால் பாதியில் ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2, 3 மற்றும் 4-வது போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. கடைசி போட்டியில் ரத்துசெய்யப்பட்டதால், இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் , தொடரை வென்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில்,
‘வானிலையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இந்த தொடரில் தோல்வியுடன் தொடங்கிய நாங்கள் அதில் இருந்து மீண்டு வந்த விதம் பாராட்டுக்குரியது வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது பணி என்ன என்பதை நன்கு தெரிந்து இருக்கிறார்கள். பும்ரா, அர்ஷ்தீப் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் எல்லோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். எங்களது தேவைக்கு ஏற்ப திட்டத்தை உருவாக்கி சரியாக செயல்படுத்துகிறார்கள். அணியில் நிறைய சிறந்த வீரர்கள் இருப்பதால் உலக கோப்பை அணிக்கு யார் யாரை தேர்வு செய்வது என்பது தலைவலியாக இருக்கபோகிறது. உலக கோப்பை போட்டிக்கு முன்பாக எங்களுக்கு இன்னும் இரண்டு மூன்று தொடர்கள் உள்ளன. அது சரியான அணியை அடையாளம் காண உதவும். என தெரிவித்தார் .






