பேட்டிங்கில் 4-வது வரிசையில் விளையாடும் அனுபவம்... - ருதுராஜ் கெய்க்வாட்

ஆட்டத்தை ரசித்து இயல்பான ஆட்டத்தை விளையாடும்படி பயிற்சியாளர் கம்பீர் கூறியதாக ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.
ராய்ப்பூர்,
ராய்ப்பூரில் நடந்த 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்த போதிலும் அந்த இலக்கை தென்ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் சதம் நொறுக்கியும் பலன் இல்லை.
ருதுராஜ், பொதுவாக தொடக்க ஆட்டக்காரராக ஆடக்கூடியவர். ஆனால் இந்த தொடரில் 4-வது வரிசைக்கு மாற்றப்பட்டார். தனது 8-வது ஒரு நாள் போட்டியில் ‘கன்னி’ சதத்தை நிறைவு செய்த மராட்டியத்தை சேர்ந்த 28 வயதான ருதுராஜ் கெய்க்வாட் “அணி நிர்வாகத்தினர் என்னிடம், இந்த தொடரில் நீங்கள் பேட்டிங்கில் 4-வது வரிசையில் ஆட இருப்பதாக சொன்னார்கள். அத்துடன் உற்சாகமாக அனுபவித்து விளையாடும்படியும் அறிவுறுத்தினர். ஒரு தொடக்க வீரருக்கு 4-வது வரிசையில் விளையாடுவதற்கு இந்த மாதிரியான நம்பிக்கை அணி நிர்வாகத்திடம் இருந்து கிடைப்பதை பாக்கியமாக கருதுகிறேன். கடைசி போட்டியிலும் சிறப்பாக ஆட முடியும் என்று நம்புகிறேன். ஆட்டத்தை ரசித்து எனது இயல்பான ஆட்டத்தை விளையாடும்படி பயிற்சியாளர் கம்பீர் கூறினார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடக்க ஆட்டக்காரராக ஆடும் போது கூட நிலைத்து நின்று விட்டால் 45 ஓவர்கள் வரை பேட் செய்ய வேண்டும் என்று எப்போதும் முயற்சிப்பேன். எது எப்படியோ 11 முதல் 40 ஓவர்களில் சீராக ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் எப்படி எடுப்பது, அந்த சூழலில் ஏதுவான இடைவெளியில் பந்தை எப்படி பவுண்டரிக்கு விரட்டுவது என்பது எனக்கு தெரியும். அதனால் தான் இந்த ஆட்டத்திலும் சாதிக்க முடியும் என்று மிகவும் நம்பினேன். என்னை பொறுத்தவரை தொடக்க வரிசையோ அல்லது மிடில் வரிசையோ முதல் 10-15 பந்துகளை நான் எப்படி அடிக்கிறேன் என்பதே முக்கியம். அதன் பிறகு இன்னிங்சை முன்னெடுத்து செல்லும் செயல்முறையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன்.
நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். அதனால் களத்தில் வலுவாக காலூன்றி விட்டால், அதை பெரிய ஸ்கோராக்குவதில் முனைப்பு காட்டுவேன். ஒரு நாள் போட்டியில் எனது சிறந்த இன்னிங்ஸ் இதுவாகும். விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்த தருணம், பார்ட்னர்ஷிப் உருவாக்கியது எல்லாமே கனவு போன்று இருந்தது. உண்மையிலேயே ரொம்ப உற்சாகமாக விளையாடினேன்” என்று ருதுராஜ் கூறினார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது.






