முதல் ஒருநாள் போட்டி: இந்திய வீராங்கனை, இங்கிலாந்து அணிக்கு அபராதம்... காரணம் என்ன..?


முதல் ஒருநாள் போட்டி: இந்திய வீராங்கனை, இங்கிலாந்து அணிக்கு அபராதம்... காரணம் என்ன..?
x

image courtesy:ICC

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

சவுத்தம்டான்,

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை (3-2 ) முதல்முறையாக வென்று வரலாறு படைத்த இந்திய அணி அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சவுத்தம்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 258 ரன்கள் எடுத்தது.

பின்னர் 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீப்தி ஷர்மா 62 ரன்களுடனும், அமன்ஜோத் கவுர் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் சார்லி டீன் 2 விக்கெட்டும், லாரன் பெல், சோபி எக்லெஸ்டோன், லாரன் பைலர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தீப்தி ஷர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.

இந்த போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனை பிரதிகா ரவால் ஆட்டமிழந்து சென்றபோது அவரது விக்கெட்டை கைப்பற்றிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் சோபி எக்லெஸ்டோனின் தோளில் இடித்தார். இது ஐ.சி.சி. நடத்தை விதிகள் லெவல் 1-ஐ மீறிய குற்றமாகும். இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது. பிரதிகா ராவலும் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும் இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால் இங்கிலாந்து அணியின் வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story