முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி


முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி
x

image courtesy:ICC

ஜிம்பாப்வே அணி நியூசிலாந்துக்கு வெறும் 8 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

புலவோயா,

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 60.3 ஓவர்களில் 149 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கிரேக் எர்வின் 39 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் மேட் ஹென்றி 6 விக்கெட்டும், நாதன் சுமித் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 307 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கான்வே 88 ரன்களும், டேரில் மிச்சேல் 80 ரன்களும் அடித்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 158 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் அடித்திருந்தது. நிக் வெல்ச் 2 ரன்களுடனும், வின்செண்ட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர்.

இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 2-வது இன்னிங்சில் 165 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 8 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 49 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் சாண்ட்னர் 4 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஒ ரூர்க் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 8 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 2.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 8 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மேட் ஹென்றி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

1 More update

Next Story