ஆசிய கோப்பை பரிசுத்தொகையை விட ஹர்திக் பாண்ட்யா வாட்ச்சின் விலை அதிகம்... வெளியான தகவல்

ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.2.6 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
சென்னை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
இதில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் யுஏஇ அணியை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோத உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பயிற்சியின்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த வாட்ச் சமூக வலைதளத்தில் வைரலாகி கவனத்தை பெற்றது. இந்நிலையில் அந்த வாட்ச்சின் விலை குறித்து தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி, இந்த வாட்ச்சின் சந்தை மதிப்பு ரூ.18 கோடி என கூறப்படுகிறது. ரிச்சர்ட் மில்லே ஆர்.எம் 27-04 என்ற வகையை சேர்ந்த இந்த வாட்ச் போன்று உலகிலேயே 50 மட்டுமே உள்ளன.
இது ஆசியக் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பணத்தை விட (ரூ.2.6 கோடி) பல மடங்கு அதிகம். இது அனைவரது மத்தியிலும் பேசு பொருளாகியுள்ளது.






