ஹாங்காங் சிக்சஸ் தொடர்: உத்தப்பா அதிரடி.. பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி

image courtesy:twitter/@HongKongSixes
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ராபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட்டார்.
மோங் கோக்,
6 வீரர்கள் மற்றும் 6 ஓவர்களை மட்டுமே கொண்டு நடத்தப்படும் "ஹாங்காங் சிக்சஸ்" கிரிக்கெட் தொடர் இன்று (நவம்பர் 7) தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்ற்றுள்ள இந்த தொடர், நவம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்துப் போட்டிகளும் ஹாங்காங்கில் உள்ள டின் குவாங் சாலை பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் ‘சி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், குவைத் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்பாஸ் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அதிரடியாக ஆடிய ராபின் உத்தப்பா 28 ரன்கள் (11 பந்துகள்) அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஷசாத் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 87 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 41 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது. கவாஜா நபே 18 ரன்களுடனும், அப்துல் சமத் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை நடத்த முடியவில்லை. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க டக்வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ராபின் உத்தப்பா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.






