நான் பார்ம் அவுட்டில் இல்லை.. ஆனால்.. - வெற்றிக்கு பின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டி


நான் பார்ம் அவுட்டில் இல்லை.. ஆனால்.. - வெற்றிக்கு பின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டி
x

image courtesy:PTI

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக மார்க்ரம் 61 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப்சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அபிஷேக் சர்மா 35 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், “இந்த விளையாட்டு உங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் தொடரில் எப்படி மீண்டும் வருகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. நாங்கள் அதையே செய்தோம். கட்டாக்கில் (முதல் போட்டி) நாங்கள் செய்த அதே விஷயங்களை மீண்டும் செய்ய விரும்பினோம், முடிவுகள் எங்கள் பக்கத்தில் இருந்தன.

பாருங்கள், சண்டிகரில் (2-வது போட்டி) நாங்கள் விளையாடிய ஆட்டத்திலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். பந்து வீச்சாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டனர். எங்களுக்கு ஒரு நல்ல குழு சந்திப்பும் இருந்தது. நாங்கள் பயிற்சியில் கட்டாக்கில் செய்த அதே விஷயங்களைச் செய்ய முயற்சித்தோம்.

நாங்கள் அடிப்படைகளுக்குத் திரும்பினோம். நாங்கள் நிறைய வித்தியாசமான விஷயங்களைச் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் அடிப்படைகள் மிகவும் முக்கியமானவை என்று நான் நினைக்கிறேன்.

நான் வலை பயிற்சியில் அழகாக பேட்டிங் செய்து வருகிறேன். என் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்தையும் நான் முயற்சி செய்கிறேன். எனவே ரன்கள் நிச்சயமாக வரும். நான் பார்ம் அவுட்டில் இல்லை. ஆனால் ரன்கள் வராமல் இருக்கின்றன. இன்றிரவு (நேற்று) நாங்கள் இந்த வெற்றியை அனுபவிப்போம்” என்று கூறினார்.

1 More update

Next Story