இந்த தோல்வியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை - கம்பீரை சாடிய முன்னாள் வீரர்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

கொல்கத்தா,

கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது. இந்த டெஸ்டில் எந்த அணியும் 200 ரன்களை தாண்டவில்லை. நான்கு இன்னிங்சிலும் பவுமா மட்டுமே அரைசதம் அடித்தார்.

ஆடுகளத்தில் பவுன்சுடன், பந்து தாறுமாறாக சுழன்று திரும்பியதால் துல்லியமாக கணிக்க முடியாமல் பேட்ஸ்மேன்கள் தகிடுதத்தம் போட்டனர். இதனால் ஆடுகளம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இருப்பினும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் இந்த பிட்சை தாங்கள்தான் கேட்டு வாங்கியதாக தெரிவித்தார். அத்துடன் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே தோல்விக்கு காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் திறமையான இளம் வீரர்களை மோசமான பிட்ச்சில் விளையாட வைத்ததால் கிடைத்த இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை என்று இந்திய முன்னாள் வீரரான புஜாரா தலைமை பயிற்சியாளரான கம்பீரை சாடியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- இதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்திய அணி அடுத்த தலைமுறை மாற்றத்தை நோக்கி நகர்வதால் இந்த தோல்வி கிடைத்தது என்று சொல்வதை ஜீரணிக்க முடியாது. அடுத்த தலைமுறையில் அடியெடுத்து வைப்பதால் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தோற்றால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் சொந்த மண்ணில் நமது வீரர்கள் கொண்டுள்ள சாதனைகளை பாருங்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் முதல் தர சாதனைகளைப் பாருங்கள். அந்த முதல் தர சாதனைகள் இருந்தபோதிலும், இந்தியாவில் நாம் தோற்றால், ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்.

ஒருவேளை இந்திய அணி இப்போட்டியை நல்ல பிட்ச்சில் விளையாடியிருந்தால் வெற்றி பெறுவதற்கு அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கும். இது போன்ற பிட்ச்களில் விளையாடினால் உங்களுக்கு சொந்த மண்ணில் விளையாடும் சாதகமே கிடைக்காது. எதிரணி உங்களுக்கு சமமாகிறது என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com