நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன்: இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா பேட்டி

இறுதி ஆட்டத்தில் ஷபாலி வர்மா ஆட்டநாயகியாக ஜொலித்தார்.
சண்டிகார்,
சமீபத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து முதல் முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது.
இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை ஷபாலி வர்மா 87 ரன்கள் (78 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசியதுடன், 2 விக்கெட்டும் எடுத்து ஆட்டநாயகியாக ஜொலித்தார். முதலில் 15 பேர் கொண்ட அணியில் ஷபாலிக்கு இடம் கிடைக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல் காயத்தால் லீக் சுற்றுடன் விலகியதால் ஷபாலி அணிக்கு அழைக்கப்பட்டார். ஷபாலி வர்மா இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார்.
இந்த நிலையில் அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மாவுக்கு சொந்த ஊரான ரோடாக்கில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 21 வயதான ஷபாலி கூறுகையில், ‘கடந்த ஓராண்டு எனக்கு மிகவும் கடினமாக அமைந்தது. கடந்த ஆண்டில் நான் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன். ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் எனது ஆட்டத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து கடினமாக உழைத்தேன். அதற்குரிய பலனை கடவுள் எனக்கு அளித்துள்ளார்.
உலகக் கோப்பை வெற்றியில் முழு பங்களிப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இறுதி ஆட்டத்தில் தொடக்கத்தில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. பிறகு என்னை அமைதிப்படுத்திக் கொண்டு, எனது திட்டமிடலை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி ரன் குவித்தேன். சதத்தை தவறவிட்டதில் வருத்தமில்லை. உலகக் கோப்பையை வெல்வதே அதை விட மிக முக்கியமாக இருந்தது.என தெரிவித்தார்.






