அதை பார்த்துத்தான் முகமது சிராஜிக்கு அறிமுக வாய்ப்பை வழங்கினேன் - ரகானே பாராட்டு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முகமது சிராஜ் 2020-21 பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் அறிமுகம் ஆனார்.
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ டிராபிக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மொத்தம் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக லண்டன் ஓவலில் நடந்த கடைசி போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகள் (முதல் இன்னிங்சில் 4, 2-வது இன்னிங்சில் 5) வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முன்னிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.
முகமது சிராஜ் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை கடந்த 2020-21-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் ரகானே தலைமையில் தொடங்கினார்.
இந்நிலையில் முகமது சிராஜிடம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததைப் பார்த்தே டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பைக் கொடுத்ததாக ரகானே பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “சிராஜிடம் எனக்குப் பிடித்த விஷயம் என்னவென்றால், அவர் எப்போதும் நீண்ட நேரம் பந்து வீச விரும்புவார். 2020 - 21 பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரில் கூட அவர் அதே தீவிரத்துடன் அசத்த விரும்பினார். அவரிடம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததைப் பார்த்தே அறிமுகமாகும் வாய்ப்பைக் கொடுத்தேன். ஆஸ்திரேலியாவில் சிராஜ் அறிமுகமானபோது கோபமாக இருந்தார். ஏனெனில் அறிமுகப் போட்டியில் அவருக்கு நான் மிகவும் தாமதமாக பந்துவீச வாய்ப்பைக் கொடுத்தேன்.
அவருக்குள் இன்னும் அந்த கோபம் இருக்கிறது. அந்த கோபமே முகமது சிராஜின் சிறந்ததை வெளிப்படுத்துகிறது. இங்கிலாந்து தொடரில் நாம் பார்த்தோம். அவரது பந்து வீச்சில் ஆக்ரோஷம், பந்து வீசும் போது தீவிரத்தன்மை ஆகியவை இருக்கிறது. அவர் தனது முதல் பந்தை வீசும் நேரத்தில் எப்போதும் சூடாகிவிடுவார். இது ஒரு சிறந்த பந்து வீச்சாளரின் சிறந்த குணம்” என்று கூறினார்.






