நான் கிரிக்கெட்டை விட வேறு எதையும் அதிகமாக நேசிக்கவில்லை - ஸ்மிருதி மந்தனா

image courtesy:PTI
மந்தனா மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக உள்ளார்.
மும்பை,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய மந்தனா மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்தது.
ஆனால் யாரும் எதிர்பாரத விதமாக ஸ்மிருதி மந்தனா - பாடகர் பலாஷ் முச்சால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டன.
இந்நிலையில் திருமணம் நின்ற பிறகு முதல் முறையாக பேட்டி அளித்துள்ள ஸ்மிருதி மந்தனா, “நான் கிரிக்கெட்டை விட வேறு எதையும் அதிகமாக நேசிக்கவில்லை. இந்திய அணிக்குரிய சீருடையை அணிவதுதான் என்னை இயக்கும் உந்து சக்தியாகும். நீங்கள் உங்களது பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டாலே அந்த எண்ணமே வாழ்க்கையில் கவனம் செலுத்த உதவும்" என்று கூறினார்.






