நான் இன்னும் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் - மந்தனா

மகளிர் உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்தூர்,
13-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று முன்தினம் அரங்கேறிய 20-வது லீக் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மல்லுகட்டின.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் ஹீதர் நைட் 109 ரன்கள் அடித்தார்.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி நல்ல தொடக்கத்தை பெற்று அபாரமாக விளையாடி வந்தது. ஒரு கட்டத்தில் 30 பந்துகளில் 36 ரன்கள் அடிக்க வேண்டும். கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்த நிலையில் இந்தியாவின் வெற்றி உறுதி என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மந்தனா ஆட்டமிழந்த பிறகு யாருமே நினைக்காத வகையில் ஆட்டம் தலைக்கீழாக மாறி இங்கிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் இங்கிலாந்து அரைஇறுதிக்கும் தகுதி பெற்றது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா கூறுகையில், “ எங்களது ஷாட் தேர்வு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். என்னிடம் இருந்துதான் சரிவு தொடங்கியது. நான் சரியான ஷாட்டை தேர்வு செய்து ஆடியிருக்க வேண்டும். பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்களுக்கு ஓவருக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. நான் ஆட்டத்தை இன்னும் ஆழமாக எடுத்து சென்றிருக்க வேண்டும்.
நான் இந்த இன்னிங்ஸ் முழுவதும் பொறுமையாக விளையாட வேண்டும், பந்தை தூக்கி அடிக்கக்கூடாது என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். ஆனால் நான் அடித்த தவறான ஷாட் மொத்தத்தையும் மாற்றிவிட்டது. கவர் திசைக்கு மேலே பந்தை தூக்கி அடிக்க முயற்சித்தேன். ஆனால் சரியாக கிளிக் ஆகவில்லை. நான் இன்னும் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.






