நான் கேம் சேஞ்சர் ஆக இருப்பேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் - ஆட்ட நாயகன் சிராஜ்

image courtesy:ICC
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் சிராஜ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் (111ரன்கள்), ஜோ ரூட் (105 ரன்கள்) சதமடித்தனர் இந்தியா தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.
இந்த போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகள் (முதல் இன்னிங்சில் 4 2-வது இன்னிங்சில் 4) கைப்பற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார்.
இந்நிலையில் ஆட்ட நாயகன் முகமது சிராஜ் அளித்த பேட்டியில், "நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், இது அற்புதமான உணர்வாக இருக்கிறது. முதல் நாள் முதல் அனைவரும் கடுமையாகப் போராடினர், முடிவு அதற்கு சாட்சியாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். திட்டம் எளிமையாக இருந்தது, ஒரே இடத்தில் தொடர்ந்து பந்தை அடிப்பது. அதிகமாக முயற்சிக்காமல், அங்கிருந்து விக்கெட்டுகள் கிடைத்தால் அது கூடுதல் பலன், எதிரணிக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும்.
இன்று காலை எழுந்தபோது, நான் கேம் சேஞ்சர் ஆக இருப்பேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். என்னால் இதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. கூகுளில் இருந்து "நான் இதை செய்ய முடியும்" என்று எழுதப்பட்ட ஒரு புகைப்படத்தை எடுத்து, அதை என் வால்பேப்பராக வைத்தேன்.
புரூக் கேட்சை நான் சரியாகப் பிடித்திருந்தால், ஒருவேளை இன்று இங்கு வர வேண்டிய நிலைமை இருந்திருக்காது. அது ஆட்டத்தை மாற்றிய தருணமாக இருந்தது. ஆனால் புரூக் மிகச் சிறப்பாக விளையாடினார், ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடியதற்கு அவருக்கு பாராட்டுகள்.
லார்ட்ஸ் தோல்வி (3-வது டெஸ்ட்) இதயத்தை உடைக்கும் தருணமாக இருந்தது. ஜடேஜா என்னிடம் நேராக பேட் வைத்து விளையாடி, பந்தை அடிக்கச் சொன்னார். என் தந்தையையும், என்னை இங்கு கொண்டு வர அவர் செய்த கடின உழைப்பையும் நினைவில் வைக்கச் சொன்னார்" என்று கூறினார்.






