ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்

image courtesy:PTI
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா (809 புள்ளி) முதலிடத்திலும், இங்கிலாந்து கேப்டன் நாட் சிவெர் (726 புள்ளி) 2-வது இடத்திலும் தொடர்கின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி (718 புள்ளி) ஒரு இடம் முன்னேறி, சக நாட்டவரான பெத் மூனியுடன் (718) 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (619) 3 இடம் அதிகரித்து 15-வது இடத்தில் இருக்கிறார்.
இதன் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (778), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி கார்ட்னர் (686) முறையே முதல் இரு இடத்தில் நீடிக்கின்றனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா (669) 3 இடம் ஏற்றம் கண்டு 3-வது இடத்தை பிடித்துள்ளார்.






