அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்த ஐ.சி.சி

image courtesy: ICC
அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் கடந்த 1965 முதல் அமெரிக்க கிரிக்கெட் வாரியம் உறுப்பினராக உள்ளது. ஆனால், ஐ.சி.சி-யின் விதிகளை அமெரிக்க கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து மீறி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக கடந்தாண்டு நடைபெற்ற ஐ.சி.சி ஆலோசனைக் கூட்டத்தில், கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை முறையாக நியமிக்காதது போன்ற 8 விதிமீறல்கள் அமெரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டது.
மேலும், 8 விதிமீறல்களையும் சரிசெய்வதற்கு ஓராண்டு ஐ.சி.சி நிர்வாகம் அவகாசம் அளித்திருந்தது. ஆனால், அவற்றில் ஒரு விதிமீறல்களைகூட அமெரிக்க கிரிக்கெட் வாரியம் சரிசெய்யாததால், உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினர் அந்தஸ்தை அமெரிக்க கிரிக்கெட் வாரியம் இழந்துள்ளதால், இனி உலகக் கோப்பை போன்ற ஐ.சி.சி தொடர்களில் பங்கேற்க முடியாது. கடந்த 2024 டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அமெரிக்க அணி அதிர்ச்சி அளித்தது.
இதன்காரணமாக, 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கு அமெரிக்க அணி தகுதிபெற்றுள்ளது. ஐ.சி.சி-யின் நடவடிக்கையால் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இந்த தொடரில் அமெரிக்க அணி பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. இன்னும் 5 மாதங்களுக்குள் ஐ.சி.சி குறிப்பிட்ட 8 விதிமீறல்களையும் சரிசெய்தால், மீண்டும் அமெரிக்க அணிக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும்.
ஐ.சி.சி நிர்வாகம் கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்வது இது முதல்முறை அல்ல. முன்னதாக, இலங்கை, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் உறுப்பினர் அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.






