உலகக்கோப்பையை நீங்கள் வெல்ல விரும்பினால்... - இந்திய மகளிர் அணிக்கு யுவராஜ் சிங் அட்வைஸ்


உலகக்கோப்பையை நீங்கள் வெல்ல விரும்பினால்... - இந்திய மகளிர் அணிக்கு யுவராஜ் சிங் அட்வைஸ்
x

image courtesy:Twitter/@BCCIWomen

தினத்தந்தி 12 Aug 2025 3:58 PM IST (Updated: 12 Aug 2025 10:08 PM IST)
t-max-icont-min-icon

இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை.

மும்பை,

8 அணிகள் பங்கேற்கும் 13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பதை குறிக்கும் கவுண்ட்டவுன் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. இதில் ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, தலைமை செயல் அதிகாரி சஞ்ஜோக் குப்தா, இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங், முன்னாள் வீராங்கனை மிதாலிராஜ், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய மகளிர் அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறது. அந்த ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தற்போது சொந்த மண்ணில் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இந்திய அணி வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பையை வெல்ல இந்திய மகளிர் அணிக்கு 2007 டி20 மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பைகளை ஆண்கள் அணி வென்றதில் முக்கிய பங்கு வகித்த யுவராஜ் சிங் சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “இது வரலாறு படைப்பதற்கான சிறந்த வாய்ப்பு என்று நான் கருதுகிறேன். அதற்காக நீங்கள் கோப்பையை வெல்லப் போகிறீர்கள் என்று ஆரம்பத்திலிருந்தே நினைக்கக் கூடாது. நீங்கள் அனைத்து புதிரையும் அனுபவிக்க வேண்டும். செயலில் கவனம் செலுத்தினால் முடிவுகள் தாமாக வரும். நம்முடைய மகளிரணி சில இறுதிப்போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது என்று நினைக்கிறேன்

அதிகமாக சிந்திக்காமல் நிகழ்காலத்தில் இருங்கள். ரசிகர்கள் பவுண்டரி, சிக்சர் அடிப்பதை அல்லது விக்கெட் எடுப்பதைப் பார்க்க விரும்புவார்கள். ஆனால் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அழுத்தத்தில் இருப்பீர்கள். அதனால் விஷயங்கள் சாதகமாக அமையாது. ரொம்ப அதிகமாக சிந்திக்காமல், தற்போதைய தருணத்தை உற்சாகமாக அனுபவியுங்கள். உங்களது திறமை, அனுபவத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் நாட்டுக்காக ஆட்டத்தில் வெற்றி பெற முடியும் என நீங்கள் நம்ப வேண்டும். அப்போதுதான் சாதிக்க முடியும்” என்று கூறினார்.

1 More update

Next Story