இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்த இந்தியா... கேப்டன் சுப்மன் கில் கூறியது என்ன..?


இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்த இந்தியா... கேப்டன் சுப்மன் கில் கூறியது என்ன..?
x

image courtesy:BCCI

தினத்தந்தி 4 Aug 2025 8:34 PM IST (Updated: 4 Aug 2025 8:36 PM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா சமன் செய்தது.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' டிராபிக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முடிவடைந்த முதல் 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இங்கிலாந்து தரப்பில் ஹாரி புரூக் (111ரன்கள்), ஜோ ரூட் (105 ரன்கள்) சதமடித்தனர் இந்தியா தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றிக்குப்பின் இந்திய கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டியில், "ஆமாம், நிச்சயமாக இந்த தொடர் முழுவதும் இரு அணிகளும் விளையாடிய விதம் சிறப்பானதாக இருந்தது. ஒவ்வொரு போட்டியுமே 4-வது மற்றும் 5-வது நாட்கள் வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தொடரில் ஒரு அணியாக நாங்கள் செயல்பட்ட விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் செயல்பட்ட விதம் மிகச்சிறப்பாக இருந்தது.

சிராஜ் மற்றும் பிரசித் போன்ற நல்ல பந்து வீச்சாளர்கள் உங்களிடம் இருக்கும்போது, கேப்டன்சி மிகவும் எளிதாகத் தெரிகிறது. இந்த போட்டியின்போது ஒரு கட்டத்தில் நாங்கள் சற்று பதட்டம் அடைந்தாலும் இறுதியில் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. ஆனால் இன்று காலை இந்த ஸ்பெல்லை அவர்கள் கடந்து வந்த விதம் எங்களுக்கு அற்புதமாக இருந்தது" என்று கூறினார்.

1 More update

Next Story