ஐ.பி.எல்.: சென்னை அணியில் மீண்டும் விளையாடப்போவது குறித்து மனம் திறந்த அஸ்வின்

image courtesy:twitter/@ChennaiIPL
10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இணைந்துள்ளார்.
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இதில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23-ந்தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.
இந்த தொடருக்கு தயாராகும் பொருட்டு முன்னாள் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்சின் பயிற்சி முகாம் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9¾ கோடிக்கு இந்திய முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கியது. 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்சுக்காக விளையாடிய அஸ்வின் பிறகு புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு விளையாடினார்.
10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சொந்த ஊர் அணியில் இணைந்துள்ள அஸ்வின் தற்போது சக வீரர்களுடன் இணைந்து சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் சென்னை அணியில் இணைந்தது குறித்து மனம் திறந்துள்ள அஸ்வின் பேசுகையில், "உண்மையில் இது வித்தியாசமான உணர்வாக இருக்கிறது. நான் இங்கிருந்து வெளியேறி பல ஆண்டுகள் ஆகி விட்டது அல்லவா? மீண்டும் அதே அணிக்கு திரும்பி வந்துள்ளேன். ஆனால் வீரர்கள் எல்லாம் அதே வீரர்கள்தான். இதுநாள் வரைக்கும் ஒவ்வொரு சீசனுக்கும் ரொம்ப கடினமாக பயிற்சி செய்துள்ளேன். ஆனால் இப்போது திடீரென இங்கு (சென்னை) வந்த உடனே மிகவும் சீனியர் வீரராக உணர்கிறேன். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. சொந்த மண்ணில் (சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்) விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று கூறினார்.






