ஐ.பி.எல்.: டி வில்லியர்ஸ் தவறான அணியில் விளையாடி விட்டார் - இந்திய முன்னாள் வீரர் விமர்சனம்

image courtesy: AFP
ஐ.பி.எல். தொடரில் டி வில்லியர்ஸ் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளில் விளையாடியுள்ளார்.
மும்பை,
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஆன டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ளார். ஐ.பி.எல். தொடரிலும் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளில் விளையாடியுள்ள அவர் 5162 ரன்கள் குவித்துள்ளார். தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் சர்வதேச மற்றும் ஐ.பி.எல். போட்டிகளிலும் மிகப்பெரிய வீரராக திகழ்ந்தார்.
2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். சீசனில் பெங்களூரு அணியில் இணைந்த அவர், பல போட்டிகளில் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இருப்பினும் அவரால் ஒரு ஐ.பி.எல். கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. 2021-ம் ஆண்டோடு ஐ.பி.எல். தொடரிலிருந்தும் விடை பெற்றார்.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரின்போது பெங்களூரு அணிக்காக விளையாட முடிவு செய்ததுதான் டி வில்லியர்ஸ் செய்த மிகப்பெரிய தவறு என்று சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஏபி.டி வில்லியர்ஸ் சிறப்பான வீரராகத்தான் இருந்தார். அவர் சிறப்பாக விளையாடும்போது பெருமளவு தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை 50 சராசரியுடனும், ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பான வீரராகவும் திகழ்ந்தார்.
ஆனால் ஐ.பி.எல். தொடரை பொருத்தமட்டில் அவருடைய உண்மையான திறனுக்கு ஏற்ப சரியாக பயன்படுத்தப்படவில்லை. இதை சொல்வதற்கு என்னை மன்னித்துக்கொள்வோம். ஏனெனில் அவர் தவறான அணியில் விளையாடி விட்டார் என்பதே எனது கருத்து. அவர் மட்டும் ஐ.பி.எல் போட்டிகளில் வேறு ஒரு அணியில் விளையாடியிருந்தால் அவருடைய மிகச்சிறப்பான மறு முகத்தை பார்த்திருக்கலாம்" என்று கூறினார்.






