ஐபிஎல் மினி ஏலம்: 77 வீரர்களை வாங்கிய அணிகள்...அதிக தொகைக்கு போனவர் யார்?
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களின் மினி ஏலம் இன்று நடைபெற்றது.
அபுதாபி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அபுதாபியில் இன்று நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 240 இந்தியர், 110 வெளிநாட்டவர் என மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். கடைசி நேரத்தில் மேலும் 19 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.மினி ஏலம் தற்போது தொடங்கியுள்ளது. ஏலத்தை மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் நடத்துகிறார். இதில் முதல் வீரராக வந்த ஜேக் பிரேசர் மெக்கர்க்கை யாரும் ஏலத்தில் வாங்கவில்லை. இதனையடுத்து வந்த டேவிட் மில்லரை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது.
இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை ஏலத்தில் வாங்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மல்லுக்கட்டினர். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் விலகியது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் கோதாவில் குதித்தது. இவரை வாங்க சென்னை - கொல்கத்தா இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இவரது விலை எகிறி கொண்டே சென்றது. இறுதியில் ரூ. 25.20 கோடிக்கு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்நிலையில் மினி ஏலம் முடிவடைந்துள்ளது. அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை (மொத்தம் 77) போட்டி போட்டு வாங்கின. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு எதிர்பார்த்தது போலவே கேமரூன் கிரீன் ரூ.25.20 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டார்.
Live Updates
- 16 Dec 2025 8:17 PM IST
முதல் சுற்றில் விலை போகாத இந்திய சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாஹரை வாங்க பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.5.20 கோடிக்கு சென்னை வாங்கியது.
- 16 Dec 2025 8:12 PM IST
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றியை ரூ.2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
- 16 Dec 2025 8:11 PM IST
ரச்சின் ரவீந்திரா (ரூ.2 கோடி) மற்றும் ஆகாஷ் தீப்பை (ரூ.1 கோடி) அடிப்படை விலைக்கே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது.
- 16 Dec 2025 8:09 PM IST
லியாம் லிவிங்ஸ்டனுக்கு ஜாக்பாட்:
முதல் சுற்றில் விலை போகாத லியாம் லிவிங்ஸ்டனை ஏலத்தில் வாங்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அவரை ரூ.13 கோடிக்கு ஐதராபாத் தட்டி தூக்கியது.
- 16 Dec 2025 8:07 PM IST
முதல் சுற்றில் ஏலம் போகாத வீரர்களுக்கான மறு ஏலம் நடைபெறுகிறது. இதிலும் பிரித்வி ஷா, ஜேக் பிரெசர் மெக்கர்க்கை யாரும் வாங்கவில்லை.
- 16 Dec 2025 8:06 PM IST
முதல் சுற்றில் ஏலம் போகாத வீரர்களுக்கான மறு ஏலம் நடைபெறுகிறது.
இதில் இந்திய வீரரான சர்பராஸ் கானை ரூ. 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
- 16 Dec 2025 7:32 PM IST
மனிசங்கர் முராசிங், இசாஸ் சவாரியா, ஜிக்கு பிரைட், ஆயுஷ் வர்தாக், உத்கார்ஷ் சிங், கரண் லால், நாதன் ஸ்மித், டேனியல் லேட்கன் ஆகியோரை யாரும் வாங்க முன்வரவில்லை.
- 16 Dec 2025 7:28 PM IST
அன்கேப்டு வீரர்களை வாங்குவதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆர்வம் காட்டின.
அதற்கேற்றவாறே அதர்வா என்ற வீரரை மும்பை அணி ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது.
மறுபுறம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அமித் குமார், பிரபுல் கீல் மற்றும் கிரெய்ன்ஸ் புலேட்ரா ஆகிய வீரர்களை அடிப்படை விலைக்கே (ரூ.30 லட்சம்) சீரான இடைவெளியில் வாங்கியது.
அதேபோல் கொல்கத்தா அணி சர்தக் ரஞ்சன் மற்றும் தக்ஷ் கம்ரா ஆகிய அன்கேப்டு வீரர்களை அடுத்தடுத்து வாங்கியது.
- 16 Dec 2025 7:19 PM IST
ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான கூப்பர் கோனோலியை ரூ. 3 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது.












